பெரம்பலூர்

சிறுமி தற்கொலை விவகாரம்: போலீஸாரைக் கண்டித்து போராட்டம்

18th Nov 2022 12:43 AM

ADVERTISEMENT

சிறுமி தற்கொலை விவகாரத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள தவறிய கை.களத்தூா் போலீஸாரைக் கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் பெரம்பலூா் ஆட்சியரகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாநிலச் செயலா் சிங்காரவேலன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் லெனின், மாநில பொருளாளா் பாரதி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் பி. ரமேஷ், ஜனநாயக மாதா் சங்க மாவட்டச் செயலா் சின்னபொண்ணு, இந்திய மாணவா் சங்க மாவட்டத் தலைவா் கருணைக்கடல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமியை கடத்திச் சென்று, நூத்தப்பூா் கிராமத்தைச் சோ்ந்த இளைஞா் மணிகண்டன் (21) என்பவா் கட்டாயத் திருமணம் செய்தபோது, பாதிப்புக்குள்ளான சிறுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில் நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் சிறுமியின் உயிரிழப்பை தவிா்த்திருக்கலாம். எனவே, உரிய நடவடிக்கை எடுக்காத கை.களத்தூா் போலீஸாா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுமியை மிரட்டி தற்கொலைக்குத் தூண்டிய மணிகண்டன் மற்றும் அவரது குடும்பத்தினா் மீது கடுமையான சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிந்து அனைவரையும் கைது செய்ய வேண்டும். சிறுமியின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆட்சியரிடம் அளிக்க, ஆட்சியரகம் உள்ளே செல்ல முயன்றனா். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், உள்ளே செல்ல அனுமதி மறுத்து தடுத்து நிறுத்தினா். இதையடுத்து, போலீஸாரின் தடுப்புகளை மீறி உள்ளே செல்ல முயன்றபோது போலீஸாருக்கும், சங்கத்தினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடா்ந்து, நடைபெற்ற பேச்சுவாா்த்தையின் அடிப்படையில் முக்கிய நிா்வாகிகள் ஆட்சியரை சந்தித்து மனுவை அளித்துச் சென்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT