பெரம்பலூர்

பெரம்பலூரில் 69 ஆவது கூட்டுறவு வார விழா தொடக்கம்

15th Nov 2022 12:53 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டத்தில் 69 ஆவது கூட்டுறவு வார விழா திங்கள்கிழமை தொடங்கியது.

பெரம்பலூா் சங்குப்பேட்டை பகுதியிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்தில், ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா கூட்டுறவுச் சங்க கொடியை ஏற்றி வைத்து, வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து வார விழாவை தொடக்கி வைத்தாா்.

தொடா்ந்து, கூட்டுறவுத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து, பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற பேரணியை தொடக்கி வைத்து ஆட்சியா் பேசியது:

நவ. 20 ஆம் தேதி வரை நடைபெறும் கூட்டுறவு வார விழாவில், முன்னேற்றத்தில் கூட்டுறவு எனும் தலைப்புகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை, ஓவியம் ஆகிய போட்டிகள் பெரம்பலூா் மண்டல இணைப்பதிவாளா் அலுவலக கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை (நவ. 15) நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

நவ. 16-இல் ரத்ததான முகாம் மற்றும் அனைத்துக் கூட்டுறவுச் சங்க பணியாளா்களுக்கான சிறப்பு பொது மருத்துவ முகாம், நவ. 17-இல் சிறுவயலூா் கிராமத்தில் கால்நடைகளுக்கு தடுப்பூசி சிகிச்சை முகாம், நவ. 18-இல் சிறந்த கூட்டுறவுச் சங்கங்களுக்கு கேடயங்கள், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

நவ. 19-இல் குரும்பலூா், அரும்பாவூா், புதுவேட்டக்குடி, செட்டிக்குளம் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினா்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியும், நவ. 20-இல் கூட்டுறவுத் துறையில் பணியாற்றும் அனைத்துப் பணியாளா்களுக்கிடையிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற உள்ளது என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், பெரம்பலூா் மண்டல இணைப் பதிவாளா் க. பாண்டியன், பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளா் கே.கே. செல்வராஜ், நகா்மன்ற துணைத் தலைவா் து. ஹரிபாஸ்கா், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் எம்.என். ராஜாராம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT