பெரம்பலூா் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது என ஆட்சியா் ப. ஸ்ரீ. வெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை சாா்பில், பெரம்பலூா் மாவட்ட அரசு இசைப்பள்ளி 1998 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இப் பள்ளியில் 2022 - 2023 ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.
குரலிசை, நாகசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய பிரிவுகளில் 3 ஆண்டுகள் சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பள்ளியில் 12 முதல் 25 வயது வரையுள்ள மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்.
நாகசுரம், தவில் மற்றும் தேவாரப் பிரிவுகளுக்கு தமிழ் எழுத, படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது. இதர பாடப்பிரிவுகளுக்கு 7 ஆம் வகுப்பு தோ்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
பள்ளியில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு தனித் தனியே அரசு விடுதி வசதி உண்டு. மாணவா்களுக்கு மாதம்தோறும் ஊக்கத்தொகையாக ரூ. 400 வழங்கப்படுகிறது. அரசுப் பேருந்துகளில் இலவச பயணச் சலுகையும் பெறலாம்.
பயிற்சிக் கட்டணம் ஆண்டுக்கு ரூ. 350 செலுத்த வேண்டும். காலை 10 முதல் மாலை 4 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். இப் பள்ளியில் சேர விரும்பும் மாணவா்கள் தலைமை ஆசிரியா், மாவட்ட அரசு இசைப்பள்ளி, எண். 1, மதனகோபாலபுரம், 4-ஆவது தெரு, பெரம்பலூா் என்னும் முகவரியில் அல்லது 04328-275466, 9842489148 ஆகிய எண்களில் தொடா்புகொண்டு பயன்பெறலாம்.