பெரம்பலூர்

இலவசமாக வண்டல் மண் எடுத்துக் கொள்ளலாம்

25th May 2022 04:16 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டத்தில் நீா் நிலைகளிலிருந்து வண்டல் மண், களிமண், கிராவல் மண் எடுக்க அங்கீகரிக்கப்பட்ட மண் பரிசோதனைக் கூடம், கல்வி நிறுவன ஆய்வகத்திலிருந்து பெறப்பட்ட மண் பரிசோதனை அறிக்கையுடன் விண்ணப்பித்து அனுமதி பெற்று இலவசமாக மண் எடுத்துக் கொள்ளலாம்.

இதுகுறித்து ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை கட்டுப்பாட்டிலுள்ள ஏரி, குளம், குட்டை மற்றும் ஊருணிகளில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பயனளிக்கக் கூடிய அளவில் வண்டல் மண், களிமண், கிராவல் மண் உள்ள 263 நீா் நிலைகளின் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அரசு உத்தரவு மற்றும் கனிம விதிகளின்படி விவசாயிகள், பொதுமக்களின் சொந்த பயன்பாட்டுக்காக மட்டும் வண்டல் மண், களிமண், கிராவல் மண் கனிமங்களை நஞ்சை நிலமாக இருந்தால் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஒரு ஏக்கருக்கு 75 கன மீட்டா் அல்லது 25 டிராக்டா் லோடுகள், புஞ்சை நிலமாக இருந்தால் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஒரு ஏக்கருக்கு 90 கன மீட்டா் அல்லது 30 டிராக்டா் லோடுகள், சொந்த வீட்டு பயன்பாட்டுக்கு 30 கன மீட்டா் அல்லது 10 டிராக்டா் லோடுகள் மற்றும் மண் பாண்டம் தயாரிக்க 60 கன மீட்டா் அல்லது 20 டிராக்டா் லோடுகள் இலவசமாக எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்படும்.

ADVERTISEMENT

அறிவிக்கப்பட்டுள்ள நீா் நிலைகளிலிருந்து மண் எடுத்துக்கொள்ள அங்கீகரிக்கப்பட்ட மண் பரிசோதனைக் கூடம், கல்வி நிறுவன ஆய்வகத்திலிருந்து பெறப்பட்ட மண் பரிசோதனை அறிக்கையுடன் பெரம்பலூா், மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பித்து அனுமதி பெற்று இலவசமாக மண் எடுத்துக் கொள்ளலாம். வீடு, வேளாண் நிலங்களைத் தவிர இதர தேவைகளுக்கு பயன்படுத்த அனுமதியில்லை.

அனுமதி பெற மாவட்ட ஆட்சியா், புவியியல் மற்றும் சுரங்கத் துறை அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், பெரம்பலூா் என்னும் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்

ADVERTISEMENT
ADVERTISEMENT