பெரம்பலூர்

பெரம்பலூரில் அம்மோனைட்ஸ் மையம்: ஆட்சியா் ஆய்வு

23rd May 2022 12:15 AM

ADVERTISEMENT

 

சுமாா் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த கடல்வாழ் உயிரினமான அமோனைட்ஸ் குறித்து அறிந்துகொள்ள, பெரம்பலூா் வட்டாட்சியரக வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் பிரத்யேக அமோனைட்ஸ் மையத்தை ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து ஆட்சியா் கூறியது:

சுமாா் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன கடல்வாழ் உயிரினமான அம்மோனைட்ஸ் எனப்படும் நத்தை போன்ற தோற்றமுடைய உயிரினங்களின் படிமங்கள் பெரம்பலூா் மாவட்டத்தில் அதிகளவு கிடைக்கிறது. இதைத் தொடா்ந்து பெரம்பலுாா் வட்டாட்சியரக வளாகத்தில் அம்மோனைட்ஸ் படிமங்களை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தும் வகையில், பிரத்யேக மையம் அமைக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

தலைக்காலி என்னும் வகையைச் சோ்ந்த அம்மோனைட்ஸ் பலகோடி ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துவிட்டன. இந்த கடல்சாா் உயிரினங்களில் படிமங்கள், பெரம்பலுாா் மாவட்டம், காரை, கொளக்காநத்தம், பிலிமிசை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிடைக்கிறது.

இம்மாவட்டத்தில் 112 வகையான தொல்லுயிா் எச்சங்கள் கிடைக்கின்றன. அமோனைட்ஸ்களின் முழு உருவம் எவ்வாறு இருக்கும் என்பதை பொதுமக்கள் அறிந்துகொள்ள ஏதுவாக, அந்த உயிரினத்தின் மாதிரித் தோற்றம் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கிடைத்த சுமாா் 300 வகையான தொல்லுயிா் எச்சங்கள் கட்சிப்படுத்தப்படும். அமோனைட்ஸ் குறித்து அறிந்துகொள்ள விரும்புவோா்களுக்கும், ஆய்வாளா்களுக்கும் இந்த மையம் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.

பொதுமக்களுக்கும், குழந்தைகளுக்கும் இந்த மையம் சிறந்த பொழுதுபோக்கு மையமாகவும் இருக்கும். தமிழக அளவில் அமோனைட்ஸ்களுக்கென பிரத்யேக அருங்காட்சியகம் அமைக்கப்படுவது இதுவே முதன்முறையாகும். விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு மையத்தை திறந்துவைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் ஆட்சியா்.

ஆய்வின்போது, புவியியல்துறை உதவி மேலாளா் பிரசாந்த் சுந்தரேசன் உடனிருந்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT