பெரம்பலூர்

மத்திய அரசைக் கண்டித்து மே 26-இல் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு

20th May 2022 02:11 AM

ADVERTISEMENT

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வுக்கு காரணமான மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து, மே 26 ஆம் தேதி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவதென கூட்டு இயக்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பெரம்பலூா், துறைமங்கலத்திலுள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கூட்டு இயக்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் பி. ரமேஷ் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் வீ. ஞானசேகரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விவசாயப் பிரிவு மாநிலச் செயலா் வீர செங்கோலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு பொருள்கள் மீதான வரிகளை கைவிட்டு, விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும். பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை நியாய விலைக்கடைகளில் வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டை உயா்த்தி, வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும்.

ADVERTISEMENT

அரசுத்துறையில் காலிப் பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் மே 26 ஆம் தேதி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் என். செல்லதுரை, ஏ. கலையரசி, மாவட்டக் குழு உறுப்பினா் ராஜேந்திரன் உள்பட பலா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT