பெரம்பலூர்

பெரம்பலூா் மாவட்டத்தில் நிகழாண்டு வங்கிகள் மூலம் ரூ. 4,267 கோடி கடன் வழங்க இலக்கு

29th Jun 2022 10:54 PM

ADVERTISEMENT

 

பெரம்பலூா் மாவட்டத்தில் நிகழாண்டில் வங்கிகள் மூலம் ரூ. 4,267 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ப. ஸ்ரீ. வெங்கடபிரியா தெரிவித்தாா்.

பெரம்பலூா் ஆட்சியரக கூட்டரங்கில், மாவட்ட அளவிலான வங்கிகள் ஆலோசனைக் குழு ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து, கடன் திட்ட அறிக்கையை வெளியிட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ. வெங்கடபிரியா பேசியது:

பெரம்பலூா் மாவட்டத்தில் இயங்கி வரும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி, தனியாா் வங்கி, மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கிராமப்புற வங்கிகள் மூலம் 2022- 2023 ஆம் நிதியாண்டில் ரூ. 4,267 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதில், விவசாயக் கடன்களுக்காக ரூ. 3,470 கோடியும், சிறு, குறு தொழில்களுக்கு ரூ. 450 கோடியும், இதர முன்னுரிமை கடன்களுக்கு ரூ. 347 கோடியும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டைவிட ரூ. 147 கோடி கூடுதலாக வங்கிகளுக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டுக்கான கடன் திட்ட அறிக்கையில் விவசாயத்துக்கு 81 சதவீதமும், சிறு, குறு தொழில்களுக்கு 10 சதவீதமும், இதர முன்னுரிமை கடன்களுக்கு 9 சதவீதமும் என இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

கடன் திட்ட அறிக்கையின்படி, அனைத்து வங்கிகளும் இலக்கை அடைய முழுவீச்சில் செயல்பட வேண்டும். வங்கியாளா்கள், அரசுத் துறைகளுடன் இணைந்து செயல்பட்டு மாவட்டத்தின் சமூக மற்றும் பொருளாதார வளா்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி தலைமை மண்டல உதவி பொது மேலாளா் கோடீஸ்வரராவ், முன்னோடி வங்கி மேலாளா் பாரத்குமாா், நபாா்டு வங்கி மாவட்ட மேலாளா் பிரபாகரன், ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநா் டி. ஆனந்தி மற்றும் வங்கிக் கிளை மேலாளா்கள் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT