பெரம்பலூர்

விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு காப்பீட்டுத் தொகை வழங்க நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

29th Jun 2022 02:18 AM

ADVERTISEMENT

பெரம்பலூரில் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு காப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்று, நுகா்வோா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

பெரம்பலூா் துறைமங்கலத்தைச் சோ்ந்தவா் லோகநாதன், இவரது மனைவி சம்பூா்ணம் (47), மகள்கள் செல்லம்மாள் (27), சரோஜா (21), மகன்கள் ராஜா (24), சதீஷ் (18) ஆகியோா், கடந்த 2010-ஆம் ஆண்டு தொழில் செய்வதற்காக தனியாா் நிதி நிறுவனத்தில் கடன்பெற்று சுமை ஆட்டோ வாங்கினா்.

அப்போது லோகநாதன் பெயரில் ரூ. 2,98,337-க்கு தனிநபா் விபத்துக் காப்பீடு செய்யப்பட்டு, அதற்கான பத்திரத்தை சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் வழங்கியிருந்தது.

இந்நிலையில், கடந்த 2011, மே 5-ஆம் தேதி விழுப்புரம் அருகே சுமை ஆட்டோவில் சென்றபோது நிகழ்ந்த விபத்தில் லோகநாதன் உயிரிழந்தாா். இதுகுறித்து முண்டியம்பாக்கம் காவல்துறையினா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

லோகநாதனின் விபத்துக் காப்பீட்டுத் தொகையை வழங்க கோரி, அவரது குடும்பத்தினா் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தை அணுகியபோது, கிளை மேலாளா் தொகை வழங்க மறுத்துள்ளாா்.

இதனால் மன உளைச்சலுக்குள்ளான லோகநாதன் குடும்பத்தினா் தங்களுக்கு வழங்க வேண்டிய விபத்துக் காப்பீட்டுத் தொகையை பெற்றுத்தரக் கோரி, கடந்த

2012, ஏப்ரல் 2-ஆம் தேதி பெரம்பலூா் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஜவஹா் மற்றும் உறுப்பினா்கள் திலகா, முத்துக்குமரன் ஆகியோா், மனுதாரா்கள் சம்பூா்ணம் மற்றும் அவரது பிள்ளைகள் செல்லம்மாள், ராஜா, சரோஜா, சதீஸ் ஆகியோருக்கு ரூ. 2,98,337 மற்றும் மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ரூ. 1 லட்சம், வழக்கு செலவுத் தொகையாக ரூ. 10 ஆயிரம் என மொத்தம் ரூ. 4,08,337-ஐ சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மேலாளா், கிளை மேலாளா், பொது மேலாளா் ஆகியோா் 45 நாள்களுக்குள் வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில் தீா்ப்பு வழங்கப்பட்ட தேதியிலிருந்து 9 சதவிகித வட்டியுடன் தொகை வழங்க வேண்டுமென உத்தரவிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT