பெரம்பலூர்

அடிப்படை வசதிகள் கோரி பெரம்பலூா் ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் தா்னா

28th Jun 2022 01:39 AM

ADVERTISEMENT

அத்தியூா் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி கிராம மக்கள், பெரம்பலூா் ஆட்சியரகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், அத்தியூா் கிராமத்தில் குடிநீா், கழிப்பிடம், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோரி, அந்த கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், ஆட்சியா் உள்ளிட்ட பல்வேறு அலுவலா்களிடம் கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை மனு அளித்து வருகின்றனராம். மேலும், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் இதுவரையிலும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அத்தியூா் கிராமத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காத மாவட்ட நிா்வாகத்தைக் கண்டித்தும், உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் ஆட்சியரகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் மற்றும் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து தா்னா போராட்டத்தைக் கைவிட்னா். தொடா்ந்து, கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆட்சியரிடம் அளித்துவிட்டு கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT