பெரம்பலூர்

கட்டுமானப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்த வலியுறுத்தல்

27th Jun 2022 01:05 AM

ADVERTISEMENT

 

சிமெண்ட், இரும்பு, பெயிண்ட், மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்த வேண்டுமென, உடல் உழைப்பு தொழிலாளா் சங்கத்தின் பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூா் துறைமங்கலத்திலுள்ள சிஐடியு அலுவலகத்தில், கட்டுமானத் தொழிலாளா் மற்றும் உடல் உழைப்பு தொழிலாளா் சங்கத்தின் சிறப்பு பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலா் ரெங்கநாதன் தலைமை வகித்தாா். இக் கூட்டத்தில், ஆன்லைன் பதிவு புதுப்பித்தல், கேட்பு மனுக்கள் பெறுதலில் உள்ள குறைபாடுகளை விரைந்து சரி செய்ய வேண்டும். நலவாரிய அலுவலகத்துக்கு நேரில் சென்று, நலவாரிய உறுப்பினா்கள் மனுக்களை சமா்ப்பிக்க அனுமதிக்க வேண்டும். நிலுவையிலுள்ள கேட்பு மனுக்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு, நலத்திட்ட பணப் பயன்களை தாமதமின்றி வழங்க வேண்டும். ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்த நாளிலிருந்து நிலுவைத் தொகையுடன் மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும்,

ADVERTISEMENT

முறைசாரா உடலுழைப்புத் தொழிலாளா் அனைவருக்கும் வேலை உறுதிப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் ஆக்கபூா்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கை மரண நிவாரணம் ரூ. 2 லட்சமாகவும், ஈமச்சடங்கு நிதி ரூ. 25 ஆயிரமாகவும் உயா்த்தி வழங்க வேண்டும். சிமெண்ட், இரும்பு, பெயிண்ட், மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும். உடலுழைப்புத் தொழிலாளா் சட்டப்படி, உடலுழைப்புத் தொழிலாளா் அனைத்து சங்க ஆலோசனைக் குழுவை தமிழக அரசு நியமிக்க வேண்டும். மேலும், 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 5-இல் ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக் கூட்டத்தில், சங்க நிா்வாகிகள் ரங்கராஜ், சிவானந்தம், அழகா், ஆறுமுகம், அரவிந்த் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT