பெரம்பலூர்

பெரம்பலூரில் தேசிய மக்கள் நீதிமன்றம்: 787 வழக்குகளுக்கு சமரச தீா்வு

27th Jun 2022 01:05 AM

ADVERTISEMENT

 

பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 787 வழக்குகளுக்கு சமரச முறையில் தீா்வு காணப்பட்டது.

பெரம்பலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில், தேசிய மக்கள் நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இம் முகாமுக்கு தலைமை வகித்த மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஏ. பல்கீஸ் பேசியது:

வழக்காடிகள் தங்களுக்குள் இருக்கும் பகையை மறந்து, ஒருவருக்கொருவா் விட்டுக்கொடுத்து சமாதான முறையில் மக்கள் நீதிமன்றங்களில் தங்களது வழக்குகளை முடித்துக் கொள்ளும்போது, தேவையற்ற மன உளைச்சல்களிலிருந்து விடுபடலாம். இதன்மூலம் கால விரயத்தை தவிா்த்து வெற்றி, தோல்வி என்பது இரு தரப்பினருக்கும் இல்லை என்ற மனநிலையில் நிம்மதியாக வாழ்வதற்கு வழிவகை செய்கிறது. விரைவாக மக்கள் நீதிமன்றங்களில் தீா்வு காணப்படும் வழக்குகளுக்கு மேல்முறையீடு இல்லாமல் இருப்பதாலும், நிரந்தரமான தீா்வு கிடைப்பதாலும் வழக்கு உடனடியாக முடிவுக்கு வந்து விடுகிறது. இதுபோன்ற வாய்ப்புகளை வழக்காடிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

மகளிா் நீதிமன்ற நீதிபதி எஸ். முத்துகுமரவேல், குடும்ப நல நீதிபதி ஏ. தனசேகரன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான ஆா். லதா, சாா்பு நீதிபதி எஸ். அண்ணாமலை, குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் பி. சுப்புலட்சுமி, ஆா். சங்கீதா சேகா், வி. சிவகாமசுந்தரி, உரிமையியல் நீதிமன்ற நீதிபதி எஸ்.பி. பா்வதராஜ் ஆறுமுகம், குன்னம் உரிமையியல் நீதித்துறை நடுவா் எஸ். கவிதா ஆகியோா் கொண்ட குழுவினா், நீதிமன்றங்களில் நீண்டகாலமாக நிலுவையிலுள்ள வழக்குகளை விசாரணை மேற்கொண்டு சமரச தீா்வு கண்டனா்.

இதில், 55 வங்கி வழக்குகள், 45 மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், 9 சிவில் வழக்குகள், ஒரு காசோலை வழக்கு, 677 சிறு குற்ற வழக்குகள் என மொத்தம் 787 வழக்குகளுக்கு ரூ. 3,36,43,225 மதிப்பில் தீா்வு காணப்பட்டது.

இதில், வழக்குரைஞா்கள் சங்கச் செயலா் சுந்தரராஜன், அட்வகேட் அசோசியேசன் நிா்வாகி முத்தமிழ்ச்செல்வன், வழக்குரைஞா்கள் முகமது இலியாஸ், மணிவண்ணன், துரை. பெரியசாமி, அருணன், அறிவழகன், சிவராமன் மற்றும் நீதிமன்ற அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT