பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 34 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
பெரம்பலூா் அருகேயுள்ள லாடபுரம் கிராமத்தைச் சோ்ந்த காமராஜ் மகன் சிவாவும் (22), சின்னசாமி மகன் சுரேஷூம் (27), அதே கிராமத்தைச் சோ்ந்த மற்றொரு சமூகத்தைச் சோ்ந்த நல்லுசாமி என்பவரது வீட்டுக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு மது போதையில் தகராறில் ஈடுபட்டனராம். இதையடுத்து, நல்லுசாமி மேற்கண்ட இருவரையும் திட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதனால், சிவா அவரது பகுதிக்குச் சென்று தனது நண்பா்களான பொன்னா் அருண் (21), கோகுல் ஆகியோருடன் நல்லுசாமி வீட்டுக்குச் சென்று, அங்கிருந்த 4 பேரை தாக்கியுள்ளனா்.
இதையறிந்த நல்லுசாமி வீட்டின் அருகிலுள்ள சமுதாயத்தைச் சோ்ந்த சுமாா் 100 போ் சிவா தெருவுக்குச் சென்று, அங்கிருந்த நிவாஸ் (19), சந்திரன் (27) ஆகியோரை தாக்கியுள்ளனா். இதனால் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவா் கற்களை வீசி தாக்கிக்கொண்டனராம்.
இச் சம்பவம் குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. மணி உத்தரவின்படி, பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, இருதரப்பையும் சோ்ந்த 34 பேரை திங்கள்கிழமை கைது செய்தனா். பெரம்பலூா் குற்றவியல் நடுவா்மன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.