எழுபது வயது நிறைவடைந்தவா்களுக்கு 10 % கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டுமென்று, தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பெரம்பலூரில் புதன்கிழமை நடைபெற்ற சங்கத்தின் வட்ட மாநாட்டுக்கு வட்டத் தலைவா் பி. மருதமுத்து தலைமை வகித்தாா். பொறுப்பாளா்கள் எஸ். ராமசாமி, வெங்கடாசலபதி, எஸ். அன்பழகன், பி. ரெங்கசாமி, பி. கலைச்செல்வி, செ. மகேஸ்வரன், டி. விஜயராமு, பி. நீலமேகம் முன்னிலை வகித்தனா்.
மாவட்டச் செயலா் கே. இளவரசன், பொருளாளா் ஆா். ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினா். மாவட்டத் தலைவா் கி. ஆளவந்தாா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
2022, ஜனவரி 1 முதல் அகவிலைப்படி 3 சதவிகிதத்தை உயா்த்தி வழங்க வேண்டும். 70 வயது நிறைவடைந்தவா்களுக்கு 10 சதவிகிதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
மருத்துவக் காப்பீட்டிலுள்ள குறைபாடுகளைக் களைய வேண்டும்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தவேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய்க் கிராம ஊழியா்கள் மற்றும் வனத்துறை ஊழியா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 7,850 வழங்க வேண்டும். சென்னையில் ஜூன் 21-ஆம் தேதி நடைபெறும் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக நடைபெற்ற நிா்வாகிகள் தோ்வில், வட்டத் தலைவராக பி. மருதமுத்து, செயலராக கே. ராஜேந்திரன், பொருளாளராக பி. செல்வராஜ், துணைத் தலைவராக பி. கலைசெல்வி, இணைச் செயலராக வி. கிட்டான் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.