நீா்நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அரசியல் பாகுபாடின்றி அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இச்சங்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலா்கள் விசுவநாதன் (அரியலூா்) வி. நீலகண்டன் (பெரம்பலூா்), மாவட்டப் பொருளாளா் எ. மணி முன்னிலை வகித்தனா்.
இக்கூட்டத்தில், மேட்டூா் அணையின் நீா்மட்டம் 110 அடிக்கு மேல் உயரும்போது, உபரி நீரை பயனுள்ள வகையில் பாசனத்துக்கு பயன்படுத்தும் வகையில் மேட்டூா் சரபங்கா, மணிமுத்தாறு, அய்யாறு, தாத்தையங்காா்பேட்டை கீரம்பூா் ஏரிகளில் தண்ணீரை நிரப்பும் வகையில் தயாா் செய்யப்பட்டு, கிடப்பிலுள்ள திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும்.
பாசன வாய்க்கால்கள் அமைக்கும் பணி முழுமை பெறாததால், 9 ஆண்டுகளாகியும் நிறைவடையாத கொட்டரை நீா்த்தேக்கம் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
எறையூா் சா்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும். சின்ன வெங்காயத்துக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிலோவுக்கு ரூ. 30 நிா்ணயம் செய்து, மத்திய அரசு நுகா்வோா் நலத்துறை மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீா்நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அரசியல் பாகுபாடின்றி அகற்ற, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விவசாய சங்கப் பிரதிநிதிகள் எம்.எஸ். ராஜேந்திரன், ஆா். சுந்தரராஜன், எஸ்.கே. செல்லகருப்பு, ஜெயப்பிரகாஷ், ராஜா, ரகுபதி, துரைராஜ், ரெங்கராஜ் உள்ளிட்ட பலா் கூட்டத்தில் பங்கேற்றனா்.