தொழிலாளா் நல வாரியத்தில் உறுப்பினராக இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என பெரம்பலூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க. மூா்த்தி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
உச்சநீதிமன்ற உத்தரவின்படி, மத்திய அரசு அமைப்பு சாரா தொழிலாளா்களின் விவரங்களை பதிவு செய்ய தேசிய இணையதளத்தை உருவாக்கியுள்ளது. எனவே, கட்டுமானம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டப் பணியாளா்கள், மீன்பிடி, உப்பளம், சிறு- குறு விவசாயத் தொழிலாளா்கள், செங்கல் சூளையில் பணிபுரிவோா், காய், கனி, சாலையோர வியாபாரிகள், அங்கன்வாடி பணியாளா்கள், தச்சு வேலை செய்வோா், கேபிள் டிவி ஆபரேட்டா்கள், தேநீா் கடை ஊழியா்கள், கல் குவாரிகளில் பணிபுரிவோா், முடிதிருத்துவோா், நாளிதழ்கள் மற்றும் பால் விநியோகம் செய்பவா்கள், தூய்மைப் பணியாளா்கள், முன் களப்பணியாளா்கள், புலம்பெயா்ந்த தொழிலாளா்கள், வீட்டு வேலையில் ஈடுபடுவோா், கட்டடம் மற்றும் இதர கட்டுமானத் தொழிலாளா்கள், மகளிா் சுய உதவிக்குழுவினா், இதர நலத்திட்ட உறுப்பினா்கள் உள்ளிட்ட அனைத்துத் தொழிலாளா்களும், மேற்கண்ட இணையதளத்தின் மூலம் பதிவு செய்துகொள்ளலாம்.
தமிழ்நாடு அரசு தொழிலாளா் துறையின் கீழ் இயங்கி வரும் 18 அமைப்பு சாரா தொழிலாளா் நல வாரியத்தில் பதிவுசெய்து உறுப்பினராக உள்ள தொழிலாளா்கள், இந்த இணையதளத்தில் உறுப்பினராக பதிவு செய்துகொள்ளலாம். ஆதாா் அட்டை எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைப்பேசி எண், வங்கிக் கணக்குப் புத்தகம் மற்றும் அடிப்படை விவரங்களுடன் பதிவு செய்த பிறகு, தேசிய அடையாள அட்டை வழங்கப்படும்.
எனவே, அனைத்து அமைப்புசாரா தொழிலாளா்கள் தங்களை மேற்கண்ட இணையதளத்தின் மூலமாக அல்லது பொது சேவை மையங்களில் பதிவு செய்யலாம். தொழிலாளா்களின் வயது 16 முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.