பெரம்பலூா் மாவட்டக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சாா்பில் தொடக்க பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.
பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பயிற்சிக்கு தலைமை வகித்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அறிவழகன் பேசியது:
பள்ளிக் கல்வித்துறை உத்தரவின்படி மாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சாா்பில் தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன்படி, பெரம்பலூா் ஒன்றியத்துக்கு பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், வேப்பந்தட்டை ஒன்றியத்துக்கு எசனை அரசு மேல்நிலைப் பள்ளியிலும், வேப்பூா் ஒன்றியத்துக்கு குன்னம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், ஆலத்தூா் ஒன்றியத்துக்கு பாடாலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் இப் பயிற்சி 5 நாள்களுக்கு நடைபெறுகிறது என்றாா் அவா்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலா் சுப்ரமணியன் முன்னிலையில் நடைபெற்ற பயிற்சியில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தும் 551 ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.