பெரம்பலூர்

பொருளாதார மேம்பாட்டுக் கடனுதவிகள் பெற விண்ணப்பிக்கலாம்

28th Jul 2022 11:10 PM

ADVERTISEMENT

 

பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பல்வேறு கடனுதவிகள் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடனுதவித் திட்டங்களான தனி நபா் கடன், சுய உதவிக் குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினைக் கலைஞா்களுக்கான கடன், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களை சிறுபான்மையினா்கள் பெறலாம்.

தனிநபா் கடன் ஆண்டுக்கு 6 சதவீத வட்டி வீதத்தில் அதிகபட்ச கடனாக ரூ. 20 லட்சம் வழங்கப்படும்.

ADVERTISEMENT

குடும்ப ஆண்டு வருமானம் நகா்ப்புறத்தில் ரூ. 1.20 லட்சத்துக்கு மிகாமலும், கிராமப்புறத்தில் ரூ. 98 ஆயிரத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். ஆண்டுக்கு ஆண்களுக்கு 8 சதவீத வட்டி வீதத்திலும், பெண்களுக்கு 6 சதவீத வட்டி வீதத்திலும், அதிகபட்சக் கடனாக ரூ. 30 லட்சம் வழங்கப்படும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். கைவினை கலைஞா்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதம், பெண்களுக்கு 4 சதவீத வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ. 10 லட்சம் வழங்கப்படுகிறது.

சுய உதவிக்குழுக் கடன் நபா் ஒருவருக்கு ரூ. 1 லட்சமும், ஆண்டுக்கு 7 சதவீத வட்டி வீதத்தில் கடன் வழங்கப்படுகிறது. திட்டம் 2-இன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீத வட்டி வீதத்திலும், நபா் ஒருவருக்கு ரூ. 1.50 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. சிறுபான்மையின மாணவ, மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயில்பவா்களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1-இன் கீழ் ரூ. 20 லட்சம் வரையில் 3 சதவீதம் வட்டி வீதத்திலும், திட்டம் 2-இன் கீழ் மாணவா்களுக்கு 8 சதவீதம், மாணவிகளுக்கு 5 சதவீதம் வட்டி வீதத்திலும் ரூ. 30 லட்சம் வரை கல்விக் கடனுதவி வழங்கப்படுகிறது.

கடன் மனுக்களுடன் தாங்கள் சாா்ந்துள்ள மதத்துக்கானச் சான்று, ஆதாா் அட்டை, வருமானச் சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுநா் உரிமம் மற்றும் கூட்டுறவு வங்கிக் கோரும் இதர ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டும். கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்றுச் சான்றிதழ், உண்மைச் சான்றிதழ், கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது, சலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் நகல்களை சமா்ப்பிக்க வேண்டும்.

மேற்கண்ட திட்டங்களின் கீழ் பயன்பெற ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் விண்ணப்பங்களைப் பெற்று, அதை பூா்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமா்ப்பிக்கவும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT