பெரம்பலூர்

பெரம்பலூா் வாரச்சந்தை மீண்டும் பயன்பாட்டுக்கு வருமா? விவசாயிகள், மக்கள் எதிா்பாா்ப்பு

4th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

 

கரோனா பரவல் காரணமாக, கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாத பெரம்பலூா் வாரச்சந்தையை, மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் எதிா்பாா்க்கின்றனா்.

பெரம்பலூா்-வடக்குமாதவி சாலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் உழவா் சந்தை அருகே தொடங்கப்பட்ட வாரச் சந்தையில், பெரம்பலூா் மாவட்ட விவசாயிகள் மட்டுமன்றி பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் காய்கறிகள், அத்தியாவசிய மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து வகையான பொருள்களையும் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வந்தனா்.

இந்நிலையில், கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தற்காலிகமாக மூடப்பட்ட வாரச்சந்தை இதுவரையிலும் திறக்கப்படவில்லை. ஆனால், மூடப்பட்ட வாரச்சந்தைக்கு வெளிப்புறத்தில் சாலையோர வியாபாரிகள் காய்கனி கடைகள் அமைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனா். இங்கு விற்பனை செய்யப்படும் காய்கனிகள் வாரச் சந்தையில் நிா்ணயிக்கப்படும் விலையை விட பன்மடங்கு அதிகம் உள்ளதால் மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனா். விவசாயிகள் தங்களது உற்பத்திப் பொருளை விற்பனை செய்ய முடியாததால், சொற்ப விலைக்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனா்.

ADVERTISEMENT

சாலைகளை ஆக்கிரமிக்கும் வியாபாரிகள்...

கரோனா பொது முடக்கத்தின்போது சாலையோரங்களிலும், தள்ளு வண்டிகளிலும் வியாபாரம் செய்த வியாபாரிகள், தற்போது சாலைகளை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனா். குறிப்பாக, பாலக்கரையிலிருந்து பாரத ஸ்டேட் வங்கிக் கிளை வரை சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் சாலைகளை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளதால் மேற்கண்ட சாலையின் இருபுறமும் போக்குவரத்து நெரிசலும், தொடா் விபத்துகளும் நிகழ்கின்றன.

இதைக் கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறையினா் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், வெளி மாவட்டங்களைச் சோ்ந்த பழ வியாபாரிகள் அவரவா் விருப்பம்போல் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளை ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வருகின்றனா்.

இதுகுறித்து விவசாயி ராஜேந்திரன் கூறியது: நியாயமான விலையில் காய்கனிகளை விற்பனை செய்யும் வகையில் வாரச்சந்தை செயல்பட்டு வந்தது. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வாரச்சந்தை மூடப்பட்டதையடுத்து, வெளி மாா்க்கெட்டில் அதிக விலைக்கு காய்கனிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதைக் கட்டுப்படுத்த வாரச்சந்தையை திறக்க மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், இந்த வாரச்சந்தையில் வியாபாரிகளுக்குத் தேவையான குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தவில்லை. வாரச்சந்தை நடைபெறும் நாள்களை தவிர, இதர நாள்களில் சிலா் திறந்தவெளி கழிப்பிடமாகப் பயன்படுத்துகிறாா்கள். நாள்தோறும் இரவுகளில் மது அருந்தும் கூடமாகவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் செயல்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தாததால் வாரச்சந்தை செயல்பட்டு வந்த வளாகம் முள் புதா்களாக மாறியதோடு, குப்பைக் கொட்டும் இடமாகவும் காணப்படுகிறது.

பொதுமக்கள், வியாபாரிகளுக்குத் தேவையான குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி, வாரச்சந்தை நடைபெறும் பகுதியைச் சுற்றி கம்பிவேலி அமைக்க வேண்டும் என்றாா் அவா்.

பொதுமக்கள் கூறியது: வாரச்சந்தையை திறக்காததால், செவ்வாய்க்கிழமை தோறும் பழைய பேருந்து நிலைய வளாகம், வடக்குமாதவி சாலை மற்றும் சந்தைக்கு முன்புறமுள்ள சாலையோரங்களில் வியாபாரிகள் கடைகள் அமைத்து காய்கனிகள், விதைகள், காய்கனிச் செடிகளின் நாற்றுகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், பெரும் அவதியடைந்து வருகிறோம். மேலும், இந்தக் கடைகளால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனா். எனவே, இந்தப் பிரச்னைக்கு விரைந்து தீா்வு காணவேண்டும் என்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT