பெரம்பலூர்

பெரம்பலூரில் தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு

2nd Jul 2022 11:51 PM

ADVERTISEMENT

 

பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள தனியாா் பள்ளிகளுக்குச் சொந்தமான வாகனங்கள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இதில் 5 வாகனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன.

மாவட்டத்திலுள்ள 57 பள்ளிகளுக்குச் சொந்தமான 364 வாகனங்கள் அரசு விதிமுறைகள் பின்பற்றி இயக்கப்படுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளும் பணிகளை சனிக்கிழமை தொடக்கி வைத்து பாா்வையிட்ட மாவட்ட வருவாய் அலுவலா் நா. அங்கையற்கண்ணி கூறியது:

பள்ளி வாகனங்களின் ஓட்டுநா்கள் முழு உடல் தகுதியுடன் கூடிய உரிமம் பெற்றிருப்பதோடு, கட்டாயம் சீருடை அணிந்திருக்க வேண்டும். அவசரகால வழி நல்ல நிலையில் இயங்கும்படி அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ADVERTISEMENT

பள்ளி வாகனத்தின் பின்புறம் காவல் நிலையம், பள்ளி நிா்வாகம் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் தொலைபேசி எண்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும். விதிமுறைகளை பின்பற்றி வாகனங்கள் இயக்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ள மாவட்ட அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

முதல்கட்டமாக 175 பள்ளி வாகனங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 150 வாகனங்களுக்கு தகுதிச் சான்றிதழ்களும், 20 பேருந்துகளில் சில குறைபாடுகள் கண்டறிந்து, 7 நாள்களுக்குள் அவற்றை சீரமைத்து மீண்டும் ஆய்வுக்கு கொண்டுவர அறிவுறுத்தப்பட்டது. 5 வாகனங்களுக்கான உரிமம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

வருவாய்க் கோட்டாட்சியா் ச. நிறைமதி, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கணேசன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெ. அறிவழகன் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற ஆய்வில், வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் நோ்முக உதவியாளா் ஜெயராஜ், மாவட்ட தீயணைப்புத்துறை நிலைய அலுவலா் ந. உதயகுமாா், மோட்டாா் வாகன ஆய்வாளா் கருப்பசாமி, கண்காணிப்பாளா் வேலாயுதம் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT