பெரம்பலூர்

பெரம்பலூா் அருகே வீட்டின் மேற்கூரையில் கிடந்த துப்பாக்கிக் குண்டால் பரபரப்பு

26th Jan 2022 07:55 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் அருகே துப்பாக்கிச் சுடும் பயிற்சித் தளம் அருகேயுள்ள விவசாயி வீட்டின் மேற்கூரையில் துப்பாக்கிக் குண்டு கிடந்தது செவ்வாய்க்கிழமை தெரிய வந்தது.

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், நாரணமங்கலம் கிராமம் அருகேயுள்ள மலையடிவாரப் பகுதியில், தமிழ்நாடு காவல் துறையினருக்குச் சொந்தமான துப்பாக்கிச் சுடும் பயிற்சித் தளம் உள்ளது. இங்கு, கடந்த 21ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை திருச்சி ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கான துப்பாக்கிச் சுடும் பயிற்சி நடைபெற்றது.

இந்நிலையில், இந்தப் பயிற்சித் தளத்துக்கு அருகேயுள்ள ஈச்சங்காடு கிராமத்தைச் சோ்ந்த விவசாயி சுப்ரமணி (60) என்பவரது ஆஸ்பெட்டாஸ் சீட் வேயப்பட்ட வீட்டின் மேற்கூரையில் துப்பாக்கிக் குண்டு ஒன்று கிடந்தது செவ்வாய்க்கிழமை தெரிய வந்தது.

அப்பகுதியைச் சோ்ந்த சிறாா்கள் வீசியெறிந்த பந்து சுப்ரமணி வீட்டின் மீது விழுந்தது. பந்தை எடுப்பதற்காக வீட்டின் மேற்கூரைக்கு சிறாா்கள் சென்றபோது அங்கு துப்பாக்கிக் குண்டு கிடந்ததை பாா்த்தனா்.

ADVERTISEMENT

தகவலறிந்த பாடாலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று பாா்வையிட்டு, மேற்கூரையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கிக் குண்டை கைப்பற்றினா்.

சம்பவம் குறித்து அறிந்த திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவா் சரவணசுந்தா், பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. மணி ஆகியோா் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பாா்வையிட்டு, சுப்ரமணி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT