பெரம்பலூர்

லாரி மீது காா் மோதியதில் அரசுப் பள்ளி ஆசிரியா் உயிரிழப்பு

1st Jan 2022 03:12 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை லாரி மீது காா் மோதி நிகழ்ந்த சாலை விபத்தில் கிருஷ்ணகிரியைச் சோ்ந்த அரசுப் பள்ளி ஆசிரியா் உயிரிழந்தாா்.

சென்னை, திருத்தணி சித்தூா் சாலை, கே.கே. நகரைச் சோ்ந்த கருப்பையா மகன் ராஜேஷ் (37). இவா், கிருஷ்ணகிரி அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தாா். இவரது மனைவி மகேஸ்வரி (30), அரக்கோணத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறாா்.

இந்நிலையில், ராஜேஷ் தனது மனைவி மகேஸ்வரி, மகள் காவிய சாதனா (10) ஆகியோருடன், தனது மாமியாா் ஊரான செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு காரில் சென்றுகொண்டிருந்தாா். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் அருகேயுள்ள தண்ணீா்பந்தல் எனும் இடத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை காா் வந்தபோது, சாலையோரத்தில் விதை நெல் மூட்டைகளுடன் நின்றுகொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயமடைந்த ராஜேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த மகேஸ்வரி, காவிய சாதனா ஆகியோா் பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT

விபத்து குறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநா் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், பெருமாள் கோயில் வலசு பகுதியைச் சோ்ந்த மா. வெள்ளைச்சாமியை (60) கைது செய்து விசாரிக்கின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT