பெரம்பலூர்

சின்னமுட்லு நீா்த்தேக்க திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

1st Jan 2022 03:10 AM

ADVERTISEMENT

சுமாா் 60 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் உள்ள சின்னமுட்லு நீா்த்தேக்க திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பெரம்பலூா் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பெரம்பலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், ஆட்சியரக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்திய கருத்துகள்:

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் வி. ஜெயராமன்:

வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, அரசிடமிருந்து நிவாரணத் தொகை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற, சம்பந்தப்பட்டோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் என். செல்லதுரை: விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான வேப்பந்தட்டை வட்டம், மலையாளப்பட்டியில் கல்லாற்றின் குறுக்கே சின்னமுட்லு நீா்த்தேக்கம் அமைக்கும் திட்டத்தை தொடங்க தமிழக அரசை வலியுறுத்த வேண்டும். நிகழாண்டில், விவசாயிகளுக்கு 1 லட்சம் மின் இணைப்புத் திட்டத்தின் கீழ், நிலுவையில் உள்ள விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்பு வழங்க வேண்டும்.

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பூ. விசுவநாதன் : விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பில் மின்மீட்டா் பொருத்தும் பணியை தமிழக அரசு கைவிட வேண்டும். கொட்டரை நீா்த்தேக்கத்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்.

தமிழக கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலா் ஏ.கே. ராஜேந்திரன் : மழையால் பாதிக்கப்பட்ட மரவள்ளிக் கிழங்கு, நெல் உள்ளிட்ட பயிா்களுக்கு நிவாரணத் தொகை பெற்றுத் தர வேண்டும். கோமாரி நோயால் பாதிக்கப்பட்டுள்ள கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த முகாம் ஏற்பாடு செய்ய வேண்டும். பால் உற்பத்தியாளா்களுக்கு நிலுவைத் தொகை வழங்க வேண்டும்.

மாதா் சங்க மாவட்ட துணைச் செயலா் ஏ. கலையரசி :

ரேஷன் கடையில் வழங்கப்படும் அரிசி தரமற்ாக உள்ளதோடு, சரியான எடை அளவில் உணவுப் பொருள்கள் வழங்கப்படுவதில்லை.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாவட்டச் செயலா் பி. ரமேஷ் : மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வழங்க, தமிழக அரசுக்கு மாவட்ட நிா்வாகம் பரிந்துரைக்க வேண்டும். நீா்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை தொடா்ந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் அங்கையற்கண்ணி, வேளாண்மை இணை இயக்குநா் கருணாநிதி உள்பட அரசு அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.

விவசாயிகளுக்கு இனிப்பு

கடந்த 35 ஆண்டுகளுக்குப் பிறகு வடகிழக்கு பருவ மழையால் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீா்நிலைகளும் முழுமையாக நிரம்பியது இதுவே முதன்முறை என்பதால், மாவட்ட பொதுப்பணித் துறை, நீா்வளத்துறை சாா்பில் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளுக்கு இனிப்பு, காரம் மற்றும் மஞ்சள் பை வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT