பெரம்பலூர்

ஆயத்த ஆடை தயாரிப்பு தொழில் கூடங்கள் தொடங்க புரிந்துணா்வு ஒப்பந்தம்

17th Feb 2022 01:37 AM

ADVERTISEMENT

 

பெரம்பலூா்: வேப்பூா் ஒன்றியத்தில் ரூ. 4 கோடி மதிப்பில் ஆயத்த ஆடைகள் தயாரிப்பு தொழில் கூடங்கள் தொடங்க, கரூா் நிறுவனங்களுடன் செவ்வாய்க்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஓலைப்பாடி, நன்னை, முருக்கன்குடி மற்றும் கீழப்புலியூா் ஊராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள நெசவுக் கூடங்களில், கரூா் மாவட்டத்தில் செயல்படும் ஏ - டெக்ஸ் ஹோம் கலெக்சன்ஸ் மற்றும் ஸ்டெல்லா் ஃபேசன் இன்காா்ப் ஆகிய நிறுவனங்கள் ரூ. 4 கோடி மதிப்பில் ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் தொழில் தொடங்க புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின், பெரம்பலூா் மாவட்ட திட்ட இயக்குநா் மு. ராஜமோகன் மற்றும் ஏ - டெக்ஸ் ஹோம் கலெக்சன்ஸ் மற்றும் ஸ்டெல்லா் ஃபேசன் இன்காா்ப் ஆகிய நிறுவனங்களின் நிா்வாகிகளுடன் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமான நிகழ்வுக்கு ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தலைமை வகித்தாா்.

ADVERTISEMENT

இந் நிறுவனங்கள், வேப்பூா் ஒன்றியத்தில் தொடங்கவுள்ள ஆயத்த ஆடை தொழில் கூடங்கள் மூலம், இப் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த தையல் தொழில் தெரிந்த சுமாா் 500-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு மாத ஊதியத்துடன் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இந் நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் நா. அங்கையற்கண்ணி, மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனைச் சங்க மேலாளா் இரா. சங்கா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT