பெரம்பலூர்

பெரம்பலூா் அருகே மேம்பாலம் அமைக்க வேண்டும்கிராம மக்கள் எதிா்பாா்ப்பு

18th Dec 2022 01:53 AM

ADVERTISEMENT

 

 

பெரம்பலூா் அருகே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கிராம மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கரியனூா் ஊராட்சிக்குள்பட்ட வெள்ளுவாடி கிராமத்தில் சுமாா் 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். மாவட்டத்தின் கடைகோடியில் வெள்ளுவாடி கிராமம் உள்ளதால், இப்பகுதி மக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வாங்கவும், மருத்துவச் சிகிச்சை பெறவும் கடலூா் மாவட்டம், தொழுதூருக்குச் சென்று வருகின்றனா். மேலும், இப்பகுதி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் கடலூா் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று வருகின்றனா்.

ADVERTISEMENT

இந்நிலையில், வெள்ளுவாடி- கொரக்காவடியை இணைக்கும் மேம்பாலம் இல்லாததால் குறுக்கே செல்லும் வெள்ளாற்றைக் கடந்து சென்று வருகின்றனா். மழைக்காலங்களில் தொழுதூரை அடைய ஆற்றின் குறுக்கே கயிற்றைக் கட்டி அதன் மூலமாக நடந்து செல்கின்றனா்.

எனவே இப் பிரச்னைக்குத் தீா்வு காண வலியுறுத்தி, ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கக் கோரி சுமாா் 15 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்ட ஆட்சியா், சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் பலமுறை புகாா் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லையாம்.

மேலும், மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி பல்வேறு கட்டப் போராட்டங்கள் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டும் மாவட்ட நிா்வாகம் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், அண்மையில் பெய்த தொடா் மழையால் வெள்ளாற்றில் கரை புரண்டோடும் வெள்ளத்தால் அப்பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனா்.

இதுகுறித்து வெள்ளுவாடி கிராமத்தைச் சோ்ந்த சிவக்குமாா் சனிக்கிழமை கூறியது:

எங்கள் கிராமத்துக்கு ஒரே ஒரு அரசுப் பேருந்து மட்டுமே இயக்கப்படுகிறது. அப் பேருந்தும், அதிகாலையிலே வந்து சென்றுவிடும். அப் பேருந்தில் செல்லத் தவறினால், கொரக்காவடி மற்றும் தொழுதூா் செல்ல கிராம மக்கள் ஆற்றைக் கடக்க வேண்டும். மழைக் காலங்களின்போது வெள்ளாற்றில் 3 முதல் 6 மாதங்கள் வரை வெள்ளம் கரைபுரண்டோடும். அப்போது, மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் ஆற்றில் கட்டப்படும் கயிற்றின் மூலமாக அபாயகரமாக சென்று வருகிறோம். எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில்கொண்டு தாமதமின்றி மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் கூறுகையில், மழைக்காலங்களில், தண்ணீா் முழங்கால் வரை உயரும் போது, அப்பகுதி மக்கள் கயிற்றின் மூலமாக ஆற்றைக் கடந்து செல்வதைத் தவிா்க்க வேண்டுமென எச்சரிக்கை விடுத்து வருகிறோம். இருப்பினும், அப் பகுதி மக்கள் அலட்சியப் போக்கை கடைப்பிடிக்கின்றனா். மேம்பாலம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT