பெரம்பலூர்

பெரம்பலூருக்கு கனமழை எச்சரிக்கை: முன்னேற்பாடு பணிகள் தயாா்

8th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், வானிலை ஆய்வு மையம் பெரம்பலூா் மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளதை முன்னிட்டு, முன்னேற்பாடுகள் தயாா் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் ப.ஸ்ரீ வெங்கட பிரியா.

ஆரஞ்சு எச்சரிக்கையை தொடா்ந்து மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பாக, அரசு அலுவலா்களுடன் இணைய வழி மூலமாக புதன்கிழமை அவசர ஆலோசனை மேற்கொண்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா மேலும் கூறியது:

பெரம்பலூா் மாவட்டத்தில் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள், வீடு இடிந்து விழும் சூழலில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றி, தற்காலிக முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அவா்களுக்குத் தேவையான உணவு, குடிநீா், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாக மேற்கொள்ள வேண்டும்.

மாவட்டத்தில் 12,265 மணல் மூட்டைகள், 126 ஜெனரேட்டா்கள், 96 மரம் அறுக்கும் இயந்திரங்கள், 166 ஜேசிபி இயந்திர வாகனங்கள், 147 பொக்லைன் வாகனங்கள், 109 நீா் உறிஞ்சும் இயந்திரங்கள், 4 படகுகள், 105 கொசுமருந்து தெளிக்கும் இயந்திரங்கள் தயாா் நிலையில் உள்ளது. இது தவிர, பேரிடா் காலங்களில் மீட்புப் பணிகளுக்குத் தேவையான அனைத்து விதமான ஏற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளது.

ADVERTISEMENT

பள்ளிகளில் பழுதடைந்த நிலையிலுள்ள வகுப்பறைகள், மழை நேரத்தில் பாதிப்பு ஏற்படும் நிலையில் உள்ள வகுப்பறைகளை பயன்படுத்துவதை தவிா்த்து, பள்ளி வளாகங்களில் நீா்க்கசிவு, மின்கசிவு இல்லாமல் நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

குடியிருப்புப் பகுதிகளில் நீா் தேங்காமலும், கொசுக்கள் உற்பத்தியாகாமலும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். தொற்று ஏற்படாத வகையில் பிளீச்சிங் பவுடா் தெளிக்க வேண்டும். சுகாதாரத்துறை அலுவலா்கள் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும். அவசர சூழலை கருத்தில் கொண்டு, அனைத்துத்துறை அலுவலா்களும் விழிப்புடன் இருந்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT