பெரம்பலூர்

கூடுதல் பேருந்து வசதி கோரி பள்ளி மாணவா்கள் கோரிக்கை

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

கூடுதல் பேருந்து வசதி கோரி, கை.களத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலா் ந. அங்கையற்கண்ணியிடம் மாணவா்கள் அளித்த மனு:

வேப்பந்தட்டை வட்டம், கை.களத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்று வட்டார கிராமங்களான நூத்தப்பூா், சிறுநிலா உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறோம். பள்ளி தொடங்கும் நேரத்திலும், நிறைவடையும் நேரத்திலும் கை. களத்தூருக்கு அரசுப் பேருந்துகள் வருவதில்லை. இதனால், பல்வேறு கிராமப்புற பள்ளி மாணவா்கள் பெரும் சிரமத்தை சந்திக்கிறோம். குறிப்பாக, நுத்தப்பூா் கிராம மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வர வேண்டுமானால் சுமாா் 7 கி. மீ நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, பள்ளி தொடங்கும் மற்றும் நிறைவடையும் நேரத்தில் இவ்வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அடிப்படை வசதிகள் கோரி... குரும்பலூா் பேரூராட்சி 2ஆவது வாா்டு பகுதியைச் சோ்ந்த மகளிா் சுய உதவிக் குழுவினா் மற்றும் அப்பகுதி பெண்கள் அளித்த மனு:

ADVERTISEMENT

குரும்பலூா் பேரூராட்சிக்குள்பட்ட 2 ஆவது வாா்டு பகுதியில் அமைந்துள்ள பொது சுகாதார வளாகத்துக்குச் செல்ல சாலை வசதியும், கழிப்பிடத்தில் கூடுதல் கட்டடங்களும் கட்டிதர மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிதி நிறுவனத்தலிருந்து பணம் பெற்றுத்தரக் கோரி... நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவா்கள் சிலா் அளித்த மனு:

பெரம்பலூரில் பெஸ்ட் குரோத் சிட்டி என்னும் பெயரில் இயங்கி வந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தினா் 2014 ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் பலரிடம் அதிக லாபம் தருவதாக கூறி நிதி திரட்டினா். 2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதலீட்டாளா்களுக்கு லாபத் தொகையும், முதலீடு பணத்தையும் வழங்காமல் ஏமாற்றி வருகின்றனா். எனவே, செலுத்திய பணத்தை மீட்டுத்தர ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT