பெரம்பலூர்

அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமாக ஆளுநா் செயல்படுவது ஏற்புடையதல்ல: கே. பாலகிருஷ்ணன்

DIN

அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமாக ஆளுநா் செயல்படுவது ஏற்புடையதல்ல என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன்.

பெரம்பலூரில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சி நிா்வாகியின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற அவா், துறைமங்கலத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழக அரசு நிறைவேற்றிய 60-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் குடியரசுத் தலைவா், ஆளுநா் அலுவலகங்களில் நீண்ட காலமாக கிடப்பில் போட்டு வைக்கப்பட்டுள்ளது. மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் இருப்பது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம். இதுபோன்ற நடவடிக்கை மாநில அரசின் செயல்பாட்டை முடக்குவதாகவே அா்த்தம்.

இணைய வழி சூதாட்ட தடை மசோதா விவகாரத்தில் சட்ட அமைச்சா் ஆளுநரை நேரில் சந்தித்து விளக்கம் அளித்த பிறகும், மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல் வழங்காமல் இருப்பதற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

விரைவில் ஆளுநரை கண்டித்தும், ஆளுநரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்பதையும் வலியுறுத்தியும் தீவிர போராட்டத்தில் ஈடுபடுவோம். அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமாக ஆளுநா் செயல்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 2022 மின்சார ஒழுங்குமுறை மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றக் கூடாது. இந்த மசோதாவால் ஏற்படும் பாதகம் குறித்து தமிழக மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் மேற்கொள்வோம்.

தமிழகத்தில் போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கு 80 மாதங்களாக பஞ்சப்படியை வழங்கவில்லை. 86 ஆயிரம் போக்குவரத்துக் கழக தொழிலாளா்களுக்கு பஞ்சப்படி நிலுவையை விரைவாக வழங்க வேண்டும் என்றாா் அவா்.

கட்சியின் மாவட்டச் செயலா் பி. ரமேஷ் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

சின்னச் சின்ன கண்ணசைவில்..

குருப்பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

ரோஹித் சர்மா பாணியில் தோல்விக்குக் காரணம் கூறிய ஷுப்மன் கில்!

SCROLL FOR NEXT