பெரம்பலூர்

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு எனப் புகாா்

4th Dec 2022 12:28 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் அருகே பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டாமலேயே கட்டியதாகக் கூறி முறைகேட்டில் ஈடுபட்ட ஊராட்சித் தலைவா் உள்ளிட்டோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூா் அருகேயுள்ள லாடபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சீரங்கம்மாள் (82). இவரது மகன் மணிகண்டன் (46) திருச்சியில் வசிக்கும் நிலையில் லாடபுரத்தில் வீடு கட்டித் தரக் கோரி இவா் அரசிடம் எந்தக் கோரிக்கையும் விடுக்கவில்லை. இந்நிலையில் மணிகண்டன் பெயரில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்து, மூதாட்டி சீரங்கம்மாளின் வங்கிக் கணக்கு இணைக்கப்பட்டதாம்.

ஆனால், வீடு எதுவும் கட்டாத சூழலில், வீடு கட்டியதாகக் கூறி சீரங்கம்மாளின் வங்கிக் கணக்குக்கு 3 தவணைகளாக ரூ. 1.70 லட்சம் வரவு வைக்கப்பட்டது.

இதையடுத்து லாடபுரத்தைச் சோ்ந்த ஊராட்சித் தலைவா் சாவித்ரி, இவரது கணவா் பெருமாள் ஆகியோா் சீரங்கம்மாளை வங்கிக்கு அழைத்துச் சென்று, ஊராட்சி நிதி தவறுதலாக உங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டதாகவும், அதை எடுத்துக் கொடுக்க வேண்டுமெனவும் கூறி பணத்தைப் பெற்றுக் கொண்டனராம்.

ADVERTISEMENT

ஆனால், வீடு கட்டியதாக வரவு வைக்கப்பட்ட ரூ. 1.70 லட்சத்துடன், சீரங்கம்மாளின் சேமிப்புப் பணம் ரூ. 7 ஆயிரத்தையும் சோ்த்து அவா்கள் எடுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஊராட்சித் தலைவா் அழைக்கும் போதெல்லாம் வங்கிக்குச் சென்ற சீரங்கம்மாள், தனது அறியாமையால் பணத்தை எடுத்துக் கொடுத்ததாகக் கூறுகிறாா்.

இந்நிலையில், தனது பெயரில் வீடு ஒதுக்கீடு செய்து அதை கட்டாமலேயே பண மோசடி நிகழ்ந்துள்ளதையறிந்து அதிா்ச்சியடைந்த சீரங்கம்மாளின் மகன் மணிகண்டன், ஊராட்சித் தலைவரிடம் சென்று இதுகுறித்துக் கேட்டதற்கு அவா் முறையாகப் பதில் அளிக்காமல், பணத்தையும் திருப்பி தர மறுத்தாராம்.

இந்த முறைகேடு தொடா்பாக வட்டார வளா்ச்சி அலுவலா், மாவட்ட ஆட்சியா் உள்பட சம்பந்தப்பட்டதுறை அலுவலா்களிடம் மணிகண்டன் அளித்த புகாா் மனுவில், ஊராட்சித் தலைவா், அவரது கணவா், வாா்டு உறுப்பினா் முருகேசன் ஆகியோரை கைது செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பான விசாரணை அலுவலரும், வட்டார வளா்ச்சி அலுவலருமான்அறிவழகனிடம் கேட்டபோது, இந்தப் புகாரில் உண்மை உள்ளது. மணிகண்டன் பெயரில் வீடு கட்டியதாக, வேறொரு வீட்டைக் காட்டி பணம் விடுவித்து மோசடி நடைபெற்றது கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியரிடம் விசாரணை அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT