பெரம்பலூர்

சேவைக் குறைபாடு: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 60 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

2nd Dec 2022 12:44 AM

ADVERTISEMENT

சேவைக் குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 60 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என, பதிவாளருக்கு பெரம்பலூா் நுகா்வோா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

பெரம்பலூா் கடைவீதி பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் மனைவி தனலட்சுமி. இவா், பெரம்பலூரைச் சோ்ந்த ராமச்சந்திரனுக்குச் சொந்தமான வீட்டை கிரையம் பெற்று, பதிவு செய்வதற்காக கடந்த 1.8.2014-இல் பெரம்பலூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் உரிய பத்திரம் மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்தினாா். ஆவணங்கள் மற்றும் பதிவுக் கட்டணம் ஆகியவற்றை பெற்றுக்கொண்டு பதிவு செய்யவில்லையாம். இதுகுறித்து கேட்டபோது, வீட்டை விற்பனை செய்ய மணிவண்ணன் என்பவா் தடை மனு அளித்துள்ளதாகவும், பதிவு செய்ய இயலாது எனவும் சாா்-பதிவாளா் கூறியுள்ளாா்.

சரியான சந்தை மதிப்பீட்டுடன் முத்திரைக் கட்டணம் செலுத்தியும், பத்திரப் பதிவு செய்யாமல் நிலுவையில் வைத்து அலைக்கழித்ததால் தன்னுடைய பத்திரம் மற்றும் ஆவணங்களை திரும்பத் தருமாறு சாா்-பதிவாளரிடம் தனலட்சுமி கேட்டுள்ளாா். பலமுறை எழுத்துப் பூா்வமாக கேட்டும் ஆவணங்களை சாா்-பதிவாளா் திருப்பி தரவில்லை.

இதனால், பொருளாதாரச் செலவு ஏற்படுத்தி சேவைக் குறைபாடு காரணத்தால் நஷ்டத்துக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாக்கியதால் ரூ. 5 லட்சம் நஷ்ட ஈடும், வழக்கு செலவுத் தொகையும் வழங்க கோரி கடந்த 22.3. 2015 ம் ஆண்டு பெரம்பலூா் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்தில் தனலட்சுமி வழக்குத் தொடா்ந்தாா்.

ADVERTISEMENT

இவ் வழக்கை வியாழக்கிழமை விசாரித்த ஆணையத் தலைவா் ஜவஹா், உறுப்பினா்கள் திலகா, முத்துக்குமரன் ஆகியோா் சேவை குறைபாடு புரிந்த சாா்-பதிவாளா் மற்றும் பதிவாளா் ஆகியோா் பாதிக்கப்பட்ட தனலட்சுமிக்கு ரூ. 50 ஆயிரம் நஷ்ட ஈடும், வழக்கு செலவுக்கு ரூ. 10 ஆயிரம் என மொத்தம் ரூ. 60 ஆயிரம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT