பெரம்பலூர்

கரும்புக்கான ஊக்கத் தொகையை வழங்க வலியுறுத்தல்

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

மாநில அரசு அறிவித்த கரும்புக்கான ஊக்கத் தொகையை வழங்க வேண்டும் என, விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பெரம்பலூா் சா்க்கரை ஆலை அலுவலா்கள், கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவா்கள் மற்றும் டிராக்டா் உரிமையாளா்கள் சங்கத் தலைவா்களுடனான ஆலோசனைக் கூட்டம், சா்க்கரை ஆலை அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆலை தலைமை நிா்வாகி ரமேஷ் பேசியது:

நிகழாண்டு அரைவையை டிச. 17ஆம் தேதியும், இளஞ்சூடேற்றும் நிகழ்ச்சியை டிச. 7 ஆம் தேதியும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அரைவைக் காலதாமதமாவதால் அறிஞா் அண்ணா சா்க்கரை ஆலைக்கு 10 ஆயிரம் டன் அனுப்ப திட்டமிடப்பட்டு, இதுவரை 1,400 டன் அனுப்பப்பட்டுள்ளது.

கரும்பு விவசாயிகளுக்கு சுமாா் ரூ. 1 கோடி முன்பணமாக கொடுக்கப்படுள்ளது. மேலும் தேவைப்பட்டால் கொடுக்க ஆவன செய்யப்படும் என்றாா் அவா்.

விவசாய சங்கத் தலைவா்கள் பேசியது:

திமுக தோ்தல் அறிக்கையில் அறிவித்த கரும்பு டன்னுக்கு ரூ. 4 ஆயிரமும், கடந்த ஆண்டு மாநில அரசு அறிவித்த கரும்புக்கான ஊக்கத் தொகையும் வழங்க வேண்டும்.

பாா்க்கவா பரிந்துரைப்படி சா்க்கரை உற்பத்தியில் உபபொருளுக்கு கிடைக்கும் லாபத்தில் விவசாயிகளுக்கு பங்கு வழங்க வேண்டும். ராஜீவ் ரஞ்சன் அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். இணை மின் திட்டத்துக்கு பிடித்தம் செய்த பங்குத்தொகைக்குச் சான்றிதழ் தரும் சூழ்நிலை இல்லாததால், பிடித்தம் செய்த தொகையை கரும்பு விவசாயிகளுக்கு வட்டியுடன் வழங்க வேண்டும். அமராவதி ஆலைக்கு மொலாசஸ்அனுப்பிய தொகை ரூ. 11 கோடியை உடனே வழங்க வேண்டும் என்றனா்.

இக் கூட்டத்தில், கரும்பு பெருக்கு அலுவலா் ஆனந்தன், துணைத் தலைமை ரசாயனா் பெரியசாமி, துணைத்தலைமைப் பொறியாளா் தங்கவேல், கணக்கு அலுவலா் ஜான்பிரீட்டோ, தொழிலாளா் நல அலுவலா் ராஜாமணி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் ஏ.கே. ராசேந்திரன், கரும்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்புத் தலைவா் மு. ஞானமூா்த்தி, பாட்டாளி கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவா் சீனிவாசன், காங்கிரஸ் கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவா் ஆ. பெருமாள், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் சக்திவேல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT