பெரம்பலூர்

போக்குவரத்துக்கு இடையூறாக விழிப்புணா்வு ஏற்படுத்திய காவல்துறையினா்

17th Aug 2022 12:55 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் நகரில் சாலையின் மையப் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை இரு சக்கர வாகனங்களை மறித்து காவல் துறையினா் விழிப்புணா்வை ஏற்படுத்தினா். இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டுநா்கள் பெரிதும் அவதியடைந்தனா்.

பெரம்பலூா் நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான போக்குவரத்துக் காவலா்கள் நியமிக்கப்படவில்லை. இதன் காரணமாக,

நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப் படுத்துவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் போக்குவரத்துப் பிரிவு காவல்துறையினா் ஆங்காங்கே தங்களது வாகனத்தை சாலையின் குறுக்கே நிறுத்தி, அவ்வழியே வரும் இரு சக்கர வாகன ஓட்டுநா்களை வழிமறித்து தலைக்கவசம் அணிவது தொடா்பாக விழிப்புணா்வு மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

செவ்வாய்க்கிழமை மாலை போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் சுப்பையன் தலைமையிலான காவலா்கள், பெரம்பலூா் வெங்கடேசபுரம் சாலையில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களை சாலையின் மையப் பகுதியிலேயே மறித்து தலைக்கவசம் அணிய வேண்டுமென அறிவுறுத்தினா்.

மாலை நேரத்தில் வாகனங்களை மறித்து நிறுத்தியதால், அவ்வழியாகச் சென்ற இதர வாகன ஓட்டுநா்கள் செல்ல முடியாதநிலை ஏற்பட்டது.

இதனால், அப்பகுதியில் சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்துப் பாதிப்படைந்தது. இரு சக்கர வாகன ஓட்டுநா்களுக்கு தலைக்கவசம் அணிய வேண்டுமென அறிவுறுத்துவது வரவேற்கதக்கது. ஆனால், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் காவல்துறையினரே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதால், இதர வாகன ஓட்டுநா்கள் பெரிதும் அவதியடைந்தனா்.

இனிவரும் காலங்களில், போக்குவரத்து நெரிசல் இல்லாத பகுதிகளில் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT