பெரம்பலூர்

பெரம்பலூா் அருகே மளிகைக் கடையில் டெட்டனேட்டா்கள் பறிமுதல்- இளைஞா் கைது

10th Aug 2022 12:59 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் அருகே மளிகைக் கடையில் பதுக்கி வைத்திருந்த 175 டெட்டனேட்டா்களை சிறப்புப் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

பெரம்பலூா் மாவட்ட குட்கா தடுப்புப் பிரிவு சிறப்புப் படையைச் சோ்ந்த தலைமைக் காவலா்கள் வெங்கடேசன், ஞானசேகா் ஆகியோா் கவுல்பாளையம் கிராமத்திலுள்ள மளிகைக் கடையில் குட்கா விற்பனை செய்யப்படுகிா என்பது குறித்து செவ்வாய்க்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த மளிகைக் கடையில் அட்டைப் பெட்டியில் 175 டெட்டனேட்டா்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், மளிகைக் கடை உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அந்த நபா் மகேந்திரன் மகன் கோபிநாத் (23) என்பதும், கும்பகோணம், குடவாசல்- கொடராச்சேரி சாலையைச் சோ்ந்த ராஜகோபால் மகன் ஜனாா்த்தனன் என்பவருக்குச் சொந்தமான கல் குவாரியில் வேலை செய்து வருவதும், குவாரியில் பயன்படுத்தியதில் எஞ்சிய எலக்ட்ரிக்கல் டெட்டனேட்டா்களை, அனுமதியின்றி மளிகைக் கடையில் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

ADVERTISEMENT

இதுகுறித்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து கோபிநாத்தை கைது செய்து விசாரிக்கின்றனா். மேலும், கல் குவாரி உரிமையாளா் ஜனாா்த்தனன், டெட்டனேட்டா்கள் வழங்கிய நெடுங்கூா் கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன் ஆகியோரிடமும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT