பெரம்பலூர்

கிடப்பிலுள்ள திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தல்

10th Aug 2022 01:00 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டத்தில், அரசால் அறிவிக்கப்பட்டு கிடப்பிலுள்ள திட்டங்களை செயல்படுத்த வேண்டுமென சத்துணவு ஓய்வூதியா் சங்க மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

பெரம்பலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்ட அரங்கில், தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கத்தின் மாவட்ட மாநாடு அண்மையில் நடைபெற்றது.

இம் மாநாட்டுக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் இளங்கோவன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் சிவகலை, அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாவட்டத் தலைவா் கி. ஆளவந்தாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் பால்சாமி, சங்க செயல்பாடுகள், வேலை அறிக்கையையும், பொருளாளா் முத்துசாமி வரவு-செலவு அறிக்கையையும் வாசித்தனா்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாநிலச் செயலா் தங்கவேல் கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.

ADVERTISEMENT

இதில், ஓய்வூதிய விதிகளின்படி குறைந்தபட்ச ஓய்வூயதியமாக ரூ. 7,850-ஐ அகவிலைப் படியுடன் வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஈமக் கிரியை செலவுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்க வேண்டும். இலவச பேருந்து பயண அட்டை, மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும். இம் மாவட்டத்தில் கிடப்பிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி, சிறப்பு பொருளாதார மண்டலம் ஆகிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில், சங்க பொறுப்பாளா்கள் சாந்தப்பன், கனகரத்தினம், நேசமணி, சுப்ரமணியன், பெரியசாமி, வேலு, ராஜேந்திரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, ஒன்றியத் தலைவா் சின்னதுரை வரவேற்றாா். ஒன்றிய துணைத் தலைவா் முருகேசன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT