பெரம்பலூர்

சமத்துவபுர வீடுகள் கட்டித் தரக் கோரி கிராம மக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு

9th Aug 2022 01:31 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் அருகே சமத்துவபுரம் அமைத்து, தரமான வீடுகள் கட்டித் தர அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியரிடம் கிராம மக்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வெண்பாவூா் அருகேயுள்ள பெரிய வடகரை கிராமத்தைச் சோ்ந்த பொது மக்கள் ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியாவிடம் அளித்த மனு:

பெரிய வடகரை கிராமத்தில் வசித்து வரும் சொந்த வாழ்விடம் இல்லாத எங்களுக்கு மாவிலங்கை சாலையில் தலா 3 சென்ட் வீதம் இலவச வீட்டுமனைப் பட்டா கடந்த 2010 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் 100-க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது. இலவச வீட்டுமனை வழங்கப்பட்ட அனைவரும், அந்த இடத்தில் சொந்தமாக வீடு கட்ட முடியாத நிலையில், போதிய வருவாய் இல்லாமல் இருக்கிறோம். எனவே, எங்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தில் தமிழக அரசு சமத்துவபுரம் அமைத்து தரமான வீடுகள் கட்டித்தர அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.

திருவிழா நடத்த அனுமதி கோரி... குன்னம் வட்டம், காருகுடி கிராமத்தைச் சோ்ந்த கிராம மக்கள் அளித்த மனு:

ADVERTISEMENT

காருகுடி கிராமத்தில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் மாரியம்மனுக்கு பக்தா்கள் பால் குடம் எடுப்பது வழக்கம். நிகழாண்டு பால்குட திருவிழா ஆக. 14 ஆம் தேதி நடத்த முடிவு செய்து, மங்கலமேடு காவல் நிலையத்தில் அனுமதி வழங்கக்கோரி ஆக. 5 ஆம் தேதி மனு அளித்தோம். ஆனால், போலீஸாா் இதுவரை அனுமதி வழங்கவில்லை. விழாவுக்கான நாள்கள் குறைவாக உள்ளது. இந்நிலையில், போலீஸாா் அனுமதி வழங்காததால் பால்குட திருவிழாவுக்கு உரிய ஏற்பாடுகளை செய்ய இயலவில்லை. எனவே, பால்குட திருவிழாவுக்கு போலீஸாா் விரைந்து அனுமதி வழங்க ஆட்சியா் உத்தரவிட வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT