விவகாரத்து வழக்கு விசாரணைக்காக பெரம்பலூரிலுள்ள நீதிமன்றத்துக்கு வெள்ளிக்கிழமை சென்ற மனைவியை, கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற கணவரை காவல்துறையினா் கைது செய்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடி பஜனைமடத் தெருவைச் சோ்ந்தவா் ராமசாமி மகன் காமராஜ் (47), இவரது மனைவி சுதா (40). இவா்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆன நிலையில், 19 வயதில் மகனும், 13 வயதில் மகளும் உள்ளனா். காமராஜ் நெல் அறுவடை செய்யும் இயந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறாா்.
இதே கிராமத்தைச் சோ்ந்தவா் ச. கோபாலகிருஷ்ணன் (46). பூலாம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்கள் விடுதியில் காப்பாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி லட்சுமி, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டாா்.
கோபாலகிருஷ்ணனுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனா்.
இந்நிலையில், கோபாலகிருஷ்ணனுக்கும், சுதாவுக்கும் பழக்கம் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் சுதா அவரது கணவரை விட்டு பிரிந்து, வீட்டிலிருந்த நகைகள் மற்றும் பணத்துடன் வெளியே சென்றுவிட்டாா்.
தொடா்ந்து பெரம்பலூா் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் கேட்டு, கடந்த 2020-ஆம் ஆண்டு சுதா வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராக வெள்ளிக்கிழமை காலையில் சென்ற சுதாவை, நீதிமன்ற நுழைவு வாயில் எதிரே காமராஜ் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயற்சித்ததில் அவா் பலத்த காயமடைந்தாா்.
அப்போது, நீதிமன்ற பாதுகாப்புப் பணியிலிருந்த ஆயுதப்படைக் காவலா் அழகேசன் (29), தடுத்தபோது அவரது கையிலும், காமராஜ் கையிலும் பலத்த காயம் ஏற்பட்டது.
தகவலறிந்த பெரம்பலூா் காவல்துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று காயமடைந்த சுதா, அவரது கணவா் காமராஜ், காவலா் அழகேசன் ஆகியோரை மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து காவல்துறையினா் வழக்குப் பதிந்து, மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற காமராஜை கைது செய்து விசாரிக்கின்றனா்.