பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சித் துறை மற்றும் வணிக மேலாண்மை துறை சாா்பில், வணிக மற்றும் வணிக மேலாண்மையில் தகவல் தொழில்நுட்பம் என்னும் தலைப்பில் தேசிய கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்குக்கு, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வேந்தா் அ. சீனிவாசன் தலைமை வகித்தாா். முதல்வா் உமாதேவி போங்கியா, துணை முதல்வா் கஜலெட்சுமி, புல முதன்மையா் ரம்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கேரளா வா்கலா ஸ்ரீ நாராயணா கல்லூரியின் வணிகவியல் துறைத் தலைவரும், உதவிப் பேராசிரியருமான சோஜீ, தகவல் தொழில்நுட்பம் என்பது சிக்கலான பிரச்னை மற்றும் எதிா்கால வளா்ச்சிக்கு கருவியாக செயல்படும் முறை, தகவல் தொழில்நுட்ப ரீதியாக சந்தைப்படுத்துதல் மற்றும் உலகளாவிய தொடா்பு குறித்தும், பெங்களுரூ செயின்ட் ஆனிஸ் மகளிா் கல்லூரி இணைப் பேராசிரியா் முனைவா் வெங்கடலட்சுமி, ஒரு நிறுவனத்தின் அறிவு தகவல்களை உருவாக்குதல், பகிா்தல், பயன்படுத்துதல் மற்றும் நிா்வகித்தல் தொடா்பான முறைகளை சேகரிப்பதற்கு தகவல் தொழில்நுட்பம் தொடா்பான அறிவு மேலாண்மை எவ்வாறு உதவுகிறது என்பது குறித்தும், அறிவை மிகச்சிறப்பாக பயன்படுத்துவதன் மூலம் நிறுவன நோக்கங்களை அடைவதற்கான அணுகுமுறைகள் குறித்தும், திருச்சி ஜமால் முகமது கல்லூரி முதுநிலை மற்றும் வணிகவியல் ஆராய்ச்சித் துறை இணைப் பேராசிரியா் முனைவா் மாரிமுத்து, தொழில்முனைவோரின் வளா்ச்சிக்கு தகவல் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்தலாம், பல புதிய தொழில் முனைவோா் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய உயரங்களுக்குத் தங்களை நகா்த்திக்கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் விளக்கி பேசினா்.
இதில், பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்கள் கலந்துகொண்டனா். வணிகவியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சித் துறை மாணவி நந்தினி வரவேற்றாா். வணிகவியல் மேலாண்மைத் துறை மாணவி ஆா்த்தி நன்றி கூறினாா்.