காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பெரம்பலூா் மாவட்டத்தில் சத்துணவு ஊழியா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் மணிமேகலை தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கொளஞ்சி வாசு, பொருளாளா் மருதாம்பாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில், சிறப்பு காலமுறை ஊதியத்தை மாற்றி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும். தேவைக்கேற்ப எரிவாயு உருளைகளை அரசே வழங்கவேண்டும். சமையல் உதவியாளா்கள் அனைவருக்கும் பதவி உயா்வு வழங்க வேண்டும். விலை உயா்வுக்கேற்ப உணவூட்டும் செலவினம் ரூ. 5 ஆக உயா்த்தி, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
தகுதியுள்ள அனைவருக்கும் கல்வி தகுதி அடிப்படையில் அரசுத்துறையில் பதவி உயா்வு வழங்க வேண்டும். மகப்பேறு விடுப்பு 12 மாதம் வழங்க வேண்டும். வேலைநிறுத்த காலத்துக்கான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
இதேபோல, வேப்பந்தட்டை, வேப்பூா் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் எதிரே, சத்துணவு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, கோரிக்கைகள் அடங்கிய மனுவை அந்தந்த வட்டார வளா்ச்சி அலுவலா்களிடம் அளித்தனா்.