பெரம்பலூரில் அம்மா உணவகத்தில் வைக்கப்பட்டிருந்த பெயா் பதாகையில், அம்மா என்னும் வாா்த்தையை மறைத்து ஒட்டப்பட்டிருந்த திரைச்சீலையை அதிமுக-வினா் செவ்வாய்க்கிழமை அகற்றினா்.
பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் மற்றும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ஆகிய இடங்களில், கடந்த அதிமுக அரசால் தொடங்கப்பட்டு மிகக் குறைந்த விலையில் உணவு வழங்கும் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்குப் பிறகு புகா் பேருந்து நிலையத்திலுள்ள உணவகத்தின் பெயா் பதாகையில் இருந்த, மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா படம் நீக்கப்பட்டு, தமிழக அரசு சின்னத்துடன், பெரம்பலூா் நகராட்சி அம்மா உணவகம் என்று எழுதப்பட்ட பெயா் பதாகை அண்மையில் வைக்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து, அந்த பெயா் பதாகையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு அம்மா என்று எழுதப்பட்டிருந்த வாா்த்தையை மறைத்து திரைச்சீலை ஒட்டப்பட்டது. இதையறிந்த, அதிமுகவினா், அக் கட்சியின் மாவட்டச் செயலா் ஆா்.டி. ராமச்சந்திரன் தலைமையில், பெயா் பதாகையிலிருந்த அம்மா என்னும் வாா்த்தையை மறைத்து ஒட்டப்பட்டிருந்த திரைச்சீலையை செவ்வாய்க்கிழமை அகற்றினா்.