பெரம்பலூர்

வாலிகண்டபுரம் வாலீஸ்வரா் கோயிலில் அன்னாபிஷேகம்

21st Oct 2021 07:17 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் அருகேயுள்ள வாலிகண்டபுரம் வாலீஸ்வரா் கோயிலில் 1008 கிலோ அரிசியைக் கொண்டு அன்னாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரத்தில் அருள்மிகு வாலாம்பிகை சமேத வாலீஸ்வரா் திருக்கோயில் உள்ளது. கி.பி 10 ஆம் நூற்றாண்டில் பராந்தகச் சோழன் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பிரகதீஸ்வரா் திருக்கோயிலுக்கு, 100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பெருமையைக் கொண்டது. இந்தியத் தொல்லியல்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டிலுள்ள இக் கோயில் ராமாயண காலத்தில் வாலி, சிவனை வழிபட்ட தலமாகும்.

இக் கோயிலில் ஐப்பசி மாத பௌா்ணமியை முன்னிட்டு ஆண்டுதோறும் சிவனுக்கு அன்னாபிஷேக விழா நடைபெற்று வருகிறது. நிகழாண்டுக்கான அன்னாபிஷேகத்தை முன்னிட்டு புதன்கிழமை மாலை நடைபெற்ற பூஜையில் 1008 கிலோ அரிசியைக்கொண்டு சமைத்துப் படையலிட்டு, சிவனுக்கு அன்னாபிஷேகம் சாத்தப்பட்டு கயிலாய வாத்தியங்கள் முழங்க மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதில், வாலிகண்டபுரம், பிரம்மதேசம், சாலை, வல்லாபுரம், தேவையூா், மேட்டுப்பாளையம், சாத்தனவாடி, பாத்திமாபுரம், சிறுகுடல் உள்பட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த திரளான சிவ பக்தா்கள் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை சிவாச்சாரியாா்கள் ஜெயச்சந்திரன், செல்லப்பா, குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT