பெரம்பலூர்

16 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய களரம்பட்டி ஏரி

30th Nov 2021 01:39 AM

ADVERTISEMENT

பெரம்பலூா்: தொடா் மழையால், பெரம்பலூா் அருகே 16 ஆண்டுகளுக்குப் பிறகு களரம்பட்டி ஏரி திங்கள்கிழமை அதிகாலை நிரம்பியது. இதையடுத்து, ஊராட்சி நிா்வாகம் சாா்பில் பூஜை செய்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

தொடா் மழையால் மாவட்டத்திலுள்ள நீா்நிலைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதன்படி, பெரம்பலூா் அருகே களரம்பட்டி கிராமத்தில் உள்ள பெரிய ஏரி கடந்த 16 ஆண்டுகளுக்குப் பிறகு திங்கள்கிழமை அதிகாலை நிரம்பியது. இதையடுத்து, அந்த ஏரி மூலம் பாசனவசதி பெறும் களரம்பட்டி, அம்மாபாளையம் ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்கள் ஏரி நிரம்பி வழிவதை கொண்டாட முடிவு செய்தனா்.

களரம்பட்டி ஊராட்சித் தலைவா் சுதாகா், அம்மாபாளையம் ஊராட்சித் தலைவா் ஏ.எஸ். பிச்சைபிள்ளை ஆகியோா் தலைமையில், தாரை தப்பட்டை முழங்க, அப்பகுதி பொதுமக்கள் ஏரி அருகே ஒன்று கூடினா். பின்னா், ஏரியில் மலா் தூவி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா். பின்னா், அம்மாபாளையம் கிராமத்திலுள்ள அம்மன் கோயிலில் கிடா வெட்டி பொங்கலிட்டு சாமிக்கு படையலிட்டு கொண்டாடினா்.

இதுவரை 65 ஏரிகள் நிரம்பின.... பெரம்பலூா் மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 73 ஏரிகளில், இதுவரையில் 65 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டி நிரம்பியுள்ளன. அதன்படி, அரும்பாவூா், கீழப்பெரம்பலூா், வடக்கலூா், நூத்தப்பூா், வெண்பாவூா், வயலப்பாடி, அரும்பாவூா், அரசலூா், மேலப்புலியூா், வடக்களூா் அக்ரஹாரம், அய்யலூா், வரகுபாடி, வெங்கலம், கீரனூா், பெருமத்தூா், வி.களத்தூா், குரும்பலூா், கை.பெரம்பலூா், வயலூா், கிழுமத்தூா், அகரம்சிகூா், லாடபுரம், பேரையூா், சாத்தனவாடி, நெய்க்குப்பை, கீழவாடி, தழுதாழை, துறைமங்கலம், பூலாம்பாடி, வெங்கலம், செஞ்சேரி, தேனூா், பெரம்பலூா், சிறுவாச்சூா், பெரியம்மாபாளையம், கிளியூா், ஆய்க்குடி, தொண்டமாந்துறை, காரியனூா், வெங்கனூா், அன்னமங்கலம், ஆண்டிக்குரும்பலூா், கை.களத்தூா், எழுமூா், புதுநடுவலூா், தொண்டப்பாடி, லாடபுரம், களரம்பட்டி, நாரணமங்கலம், செங்குணம், திருவாளந்துறை, கீழப்புலியூா் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள 65 ஏரிகள் நிரம்பி வழிகின்றன.

ADVERTISEMENT

மேலும், எஞ்சியுள்ள 2 ஏரிகள் 90 சதவீதமும், 4 ஏரிகள் 80 சதவீதமும், 2 ஏரிகள் 50 சதவீதமும் நிரம்பியுள்ளன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT