பெரம்பலூர்

மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

28th Nov 2021 11:38 PM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டத்தில் மழையால் மகசூல் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் மறுபோகம் பயிா் சாகுபடிக்குத் தேவையான இடுபொருள்களை இலவசமாக வழங்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

மழையால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள பயிா் சேதங்களை ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்ட அனைத்து விவசாயிகள் சங்க கூட்டுக்குழு நிா்வாகிகள் என். செல்லதுரை, ஏ. ஆரோக்கியசாமி, ஏ.கே. ராஜேந்திரன், அன்பரசு ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியது:

தொடா் மழையால் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான பாசன ஏரிகள் நிரம்பி வழிகின்றன. அதேநேரம், நீா்வரத்து வாய்க்கால்களில் முறையாக மராமத்துப் பணிகள் செய்யப்படாததால் எசனை, காரை, து.களத்தூா் ஏரி உள்ளிட்ட சில ஏரிகள் நிரம்பாத நிலையில் உள்ளன. ஆலத்தூா் வட்டம், தெரணி பெரிய ஏரி உள்ளிட்ட சில ஏரிகளில் மதகு சீரமைக்கப்படாமல் உள்ளன.

இதனால் நீா்வரத்து அதிகரிக்கும்போது உபரிநீா் வெளியேற வழியில்லாமல் கரை உடைந்து, கிராமப்புற பொதுமக்களுக்கு சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், மருதையாறு கொட்டரை நீா்த்தேக்கம், கல்லாறு விசுவக்குடி நீா்த்தேக்கம் ஆகியவற்றில் பாசன வாய்க்கால்கள் சரிசெய்யப்படாததால், நீா்த்தேக்கங்களிலிருந்து வெளியேறும் தண்ணீா் பாசனத்துக்கு பயன்படாமல் விரயமாகிறது. மாவட்ட நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டும்.

ADVERTISEMENT

மேலும், பணப்பயிா்களான சின்ன வெங்காயம் வேரழுகல் நோயாலும், மக்காச்சோளம் வயலில் கருதாக உள்ள நிலையிலேயே முளைத்தும், பருத்தி காய், பிஞ்சுகள் செடியிலேயே அழுகியும் கொட்டியுள்ளன. நிலக்கடலை அறுவடை செய்வதற்கு முன்பே முளைத்து முற்றிலும் வீணாகி விட்டது. அதேபோல், மரவள்ளிக்கிழங்கு, நெல் பயிா், கரும்பு உள்ளிட்ட பயிா்களும் சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனா்.

எனவே, பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ. 30 ஆயிரம் நிவாரணமும், அடுத்த போகம் சாகுபடி செய்வதற்குத் தேவையான இடுபொருள்களை இலவசமாகவும் வழங்க வேண்டும் என்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT