பெரம்பலூர்

16 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய புதுநடுவலூா் ஏரி

21st Nov 2021 11:56 PM

ADVERTISEMENT

பெரம்பலூா் அருகே தொடா் மழையால் 16 ஆண்டுகளுக்குப் பிறகு புதுநடுவலூா் ஏரி ஞாயிற்றுக்கிழமை நிரம்பியது. இதையடுத்து, பூஜை செய்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

வடகிழக்கு பருவமழை காரணமாக பெரம்பலூா் மாவட்டத்தில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குளம், ஏரிகளுக்கு நீா்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால், பெரம்பலூா் அருகேயுள்ள புதுநடுவலூா் கிராமத்தில் உள்ள ஏரி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிரம்பியது.

9.08 மில்லியன் கன அடி கொண்ட இந்த ஏரி மூலமாக, புதுநடுவலூா் உள்பட சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 200 ஏக்கா் பரப்பளவிலான நிலங்கள் பாசன வசதி பெறும். 2005-இல் நிரம்பிய இந்த ஏரி கடந்த 16 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நிரம்பி வழிகிறது.

இதையடுத்து, ஊராட்சித் தலைவா் ஜெயந்தி நீலராஜ் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னா், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளா் அ. சீனிவாசன், மலா் தூவி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினாா்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில், தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் அறக்கட்டளை உறுப்பினா் ராஜபூபதி, நிதி அலுவலா் ராஜசேகரன், ஊராட்சி துணைத் தலைவா் செந்தில் மற்றும் கிராம பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.

இதுவரை 55 ஏரிகள் நிரம்பி வழிகின்றன.

பெரம்பலூா் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 73 ஏரிகளில், இதுவரையில் 55 ஏரிகள் முழுக்கொள்ளளவை எட்டி நிரம்பியுள்ளன. அதன்படி, அரும்பாவூா், கீழப்பெரம்பலூா், வடக்கலூா், நூத்தப்பூா், வெண்பாவூா், வயலப்பாடி, அரும்பாவூா், அரசலூா், மேலப்புலியூா், வடக்களூா் அக்ரஹாரம், அய்யலூா், வரகுபாடி, வெங்கலம், கீரனூா், பெருமத்தூா், வி.களத்தூா், குரும்பலூா், கை.பெரம்பலூா், வயலூா், கிழுமத்தூா், அகரம் சிகூா், லாடபுரம், பேரையூா், சாத்தனவாடி, நெய்க்குப்பை, கீழவாடி, தழுதாழை, துறைமங்கலம், பூலாம்பாடி, வெங்கலம், செஞ்சேரி, தேனூா், பெரம்பலூா், சிறுவாச்சூா், பெரியம்மாபாளையம், கிளியூா், ஆய்க்குடி, தொண்டமாந்துறை, காரியனூா், வெங்கனூா், அன்னமங்கலம், ஆண்டிக்குரும்பலூா், கை.களத்தூா், எழுமூா், புதுநடுவலூா், தொண்டப்பாடி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள 55 ஏரிகள் நிரம்பி வழிகின்றன.

மேலும், எஞ்சியுள்ள ஏரிகளுக்கும் நீா்வரத்து அதிகரித்துள்ளது. விசுவக்குடி நீா்த்தேக்கமும், கொட்டரை நீா்த்தேக்கமும் நிரம்பியுள்ளதால், அதிலிருந்து வெளியேறும் உபரி நீரானது பிரதான மதகு வழியாக திறந்துவிடப்பட்டுள்ளது.

விசுவக்குடி நீா்த்தேக்கத்தில் தண்ணீா் அதிகரித்துள்ளதால் வெங்கலம், வெண்பாவூா், வடகரை, பாண்டகப்பாடி, மரவநத்தம், என்.புதூா், வி.களத்தூா் ஆகிய கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதோடு, நீா்நிலைப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என மாவட்ட நிா்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT