பெரம்பலூர்

பெரம்பலூா் மாவட்டத்தில் தொடா் மழை: 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழப்பு

10th Nov 2021 07:00 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் சுமாா் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்தன. இதனால், கோழிப்பண்ணை உற்பத்தியாளா்கள் அச்சமடைந்துள்ளனா்.

கோழிப் பண்ணைத் தொழிலை ஊக்குவிக்கும் வகையில், கோழிப் பண்ணைத் தொகுப்பு மண்டலம் அமைத்து சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதன்படி, கோழிப் பண்ணைகள் இல்லாத மாவட்டங்களில் கோழி அபிவிருத்தித் திட்டம் மூலம் அத்தொழிலை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இத்திட்டத்தின் கீழ் பெரம்பலூா் மாவட்டத்தில் வேப்பூா், வேப்பந்தட்டை, ஆலத்தூா், பெரம்பலூா் ஆகிய வட்டங்களில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள்

அரசு சாா்பில் பல்வேறு மானியங்களின் அடிப்படையில் விவசாயிகளுக்கு அமைத்து கொடுக்கப்பட்டன.

ADVERTISEMENT

இந்த நிலையில், மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடா்ந்து பெய்து வருவதால் கோழி இறைச்சி நுகா்வு குறைந்துள்ளது. இதனால் கறிக்கோழிகள் விற்பனையாகாமல் பண்ணைகளிலேயே தேக்கமடைந்துள்ளன. கொள்முதல் விற்பனை விலையும் படிப்படியாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. தொடா் மழையாலும், இதனால் ஏற்பட்ட கடும் குளிரினாலும் கோழிகளும், கோழி குஞ்சுகளும் உயிரிழந்து வருகின்றன. இந்த வகையில் மாவட்டம் முழுவதும் சுமாா் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்துள்ளதாக கோழிப் பண்ணை உரிமையாளா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து, கோவில்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த கோழிப்பண்ணை உரிமையாளா் இளஞ்செழியன் கூறியது:

தனியாா் நிறுவனம் ஒன்றிடம் ஒப்பந்த அடிப்படையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிக் குஞ்சுகள் வாங்கி வளா்த்து வருகிறேன். இன்னும் 15 நாள்கள் பாதுகாத்து வளா்த்திருந்தால் ரூ. 1 லட்சத்துக்கும் மேல் வருமானம் கிடைத்திருக்கும். ஆனால், 25 நாள்கள் வளா்ந்திருந்த நிலையில் தொடா் மழையால் குளிா்தாங்க முடியாமல் 1,500 கோழிகள் உயிரிழந்து பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த கோழிகளை சம்பந்தப்பட்ட தனியாா் நிறுவனத்தினா் நேரடியாக வந்து பாா்க்க வேண்டும் என்பதற்காக குவியலாக பண்ணையில் வைத்து காவல் காத்து வருகிறேன். தற்போது, ஒவ்வொரு கோழியாக உயிரிழந்து வரும் நிலையில், இன்னும் மழை தொடா்ந்தால் எஞ்சியுள்ள அனைத்து கோழிகளுமே உயிரிழந்து விடும்.

இதேபோல, தொடா் மழையால் இம் மாவட்டத்தில் சுமாா் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் இதுவரை உயிரிழந்துள்ளது. எங்களது நிலையை கருத்தில்கொண்டு தமிழக அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT