பெரம்பலூா் அருகே கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி, கிராம பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் அருகிலுள்ள எறைய சமுத்திரம் கிராமத்தில் சுமாா் 800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். கடந்த பல ஆண்டுகளாக
தங்கள் பகுதிக்கு கழிப்பறை, மயான பாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றித்தர வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனராம்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் உள்பட பல்வேறு அரசு அலுலா்களிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அடிப்படை பிரச்னைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, அப்பகுதியில் புதன்கிழமை திடீா் சாலை மறியலில் ஈடுபட்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
தகவலறிந்த மருவத்தூா் காவல்துறையினா் மற்றும் வருவாய்த்துறை அலுவலா்கள் அப்பகுதிக்குச் சென்று சமரச பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.
இதையடுத்து மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.