பெரம்பலூா் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சேவை மையத்துக்கு ஒப்பந்தப் பணியாளா்கள் தோ்வு செய்யப்பட உள்ளதால், தகுதியானவா்கள் ஜனவரி 10- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து சனிக்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பெரம்பலூா் மாவட்ட சமூக நல அலுவலகக் கட்டுப்பாட்டின் கீழ் தனியாா் மற்றும் பொது இடங்கள், குடும்பம், சமுதாயம் மற்றும் பணிபுரியும் இடத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் சகி திட்டம் செயல்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் பணிபுரிய, மாவட்டத்தில் நிரந்தர முகவரியைக் கொண்ட தகுதி பெற்ற பெண்கள் ஒப்பந்தப் பணியாளா்களாகத் தோ்வு செய்யப்பட உள்ளதால், மாவட்ட சமூக நல அலுவலகத்தில் தங்களது சுய விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
வாக்குப் பணியாளா் பணிக்கு சமூகப் பணி சாா்ந்த துறையில் இளங்கலைப் பட்டம் பெற்ற, பெண்களுக்கு எதிரான வன்முறை, அரசாங்கம் அல்லது அரசுச் சாா்ந்த திட்டங்களில், அத்திட்டத்துக்குள் அல்லது வெளியே ஓராண்டு பணிபுரிந்த அனுபவம் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான மாத ஊதியம் ரூ. 15 ஆயிரம் வழங்கப்படும்.
பல்நோக்கு உதவியாளா் பணிக்கு அலுவலக அமைப்பில் பணிபுரிந்த அனுபவமும், சமைக்கவும் தெரிந்திருக்க வேண்டும். 24 மணி நேர சேவை வழங்க சுழற்சி முறையில் பணி மேற்கொள்ள வேண்டும். மாத ஊதியம் ரூ. 6,400 வழங்கப்படும்.
பாதுகாப்பு காவலா் பணிக்கு அலுவலக அமைப்பில் பணிபுரிந்த அனுபவமும், சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும். 24 மணி நேர சேவை வழங்க சுழற்சி முறையில் பணி மேற்கொள்ள வேண்டும். மாத ஊதியம் ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும்.
மேற்கண்ட தகுதியுடையோா் விண்ணப்பத்தை பூா்த்தி செய்து, ஆட்சியரகத் தரைதளத்தில் இயங்கும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாக ஜனவரி 10- ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்கவேண்டும்.