பெரம்பலூரில் மத்திய மண்டல காவல்துறைத் தலைவா் வெ. பாலகிருஷ்ணன், காவல் துறையினரின் குறைகளை புதன்கிழமை கேட்டறிந்தாா்.
மத்திய மண்டல காவல் தலைவா் வெ. பாலகிருஷ்ணன், பெரம்பலூா் அருகே தண்ணீா்பந்தல் பகுதியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற காவல் துறையினரின் கவாத்து பயிற்சியை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து, காவல்துறையினரை சந்தித்து, அவா்களிடம் குறைகளை கேட்டறிந்து அவற்றை நிவா்த்தி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தாா். பின்னா், பெரம்பலூா் உட்கோட்ட துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச. மணி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (தலைமையிடம்) ஆரோக்கியபிரகாசம், பெரம்பலூா் உட்கோட்ட துணைக் கண்காணிப்பாளா் சஞ்சீவ்குமாா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.