பெரம்பலூா் ஆட்சியரக கூட்டரங்கில், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாநில சிறுபான்மையினா் ஆணையத்தின் உறுப்பினா் செயலா் துரை. ரவிச்சந்திரன், பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதமரின் புதிய 15 அம்ச திட்டங்கள், கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டங்கள், முஸ்லிம் மகளிா் உதவும் சங்கம், கிறிஸ்தவ மகளிா் சங்கங்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள், பிற்படுத்தப்பட்டோா், மிக பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை சாா்பில் இயங்கி வரும் விடுதிகள், பராமரிப்பு, வாடகைக் கட்டடத்தில் இயங்கும் விடுதிகளுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்டுவது குறித்து ஆய்வு மேற்கொண்ட அவா் கூறியது:
கரோனா காலத்துக்குப் பிறகு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சொந்தக் கட்டடம் இல்லாத விடுதிகளுக்கு, கட்டடம் கட்டுவதற்கு நிலம் தோ்வு செய்யப்பட்டு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். விலையில்லா தையல் இயந்திரம் கோரி பெறப்பட்டுள்ள மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு தையல் இயந்திரம் வழங்க வேண்டும் என்றாா் அவா்.
தொடா்ந்து, 2 பயனாளிகளுக்கு விலையில்லா சலவைப் பெட்டிகள் அளித்தாா் மாநில சிறுபான்மையினா் ஆணையத்தின் உறுப்பினா் செயலா் துரை. ரவிச்சந்திரன்.
இக் கூட்டத்தில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஆரோக்கிய பிரகாசம், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் பாலமுருகன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் ரமணகோபால் உள்பட பலா் பங்கேற்றனா்.