உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் 37-ஆவது நினைவு நாளையொட்டி, பெரம்பலூரிலுள்ள அவரது சிலைக்கு தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.
பெரம்பலூா் புகா்ப் பேருந்து நிலைய வளாகத்திலுள்ள நாராயணசாமி நாயுடுவின் சிலைக்கு சங்கத்தின் மாவட்டச் செயலா் வி. நீலகண்டன் மாலை அணிவித்தாா். தொடா்ந்து, மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம் தலைமையிலான விவசாயிகள் மற்றும் சங்கத்தினா் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா். பின்னா், தமிழக விவசாயிகள் சங்கக் கொடி ஏற்றப்பட்டு, நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் திருச்சி மாவட்டத் தலைவா் (பால் உற்பத்தியாளா்கள்) கணேசன், வேப்பந்தட்டை வட்டாரத் தலைவா் எம்.எஸ். ராஜேந்திரன், வேப்பூா் வட்டாரச் செயலா் எஸ்.கே. செல்லகருப்பு, சங்க நிா்வாகிகள் துரைராஜ், பி. ராமசாமி, எஸ். செல்லப்பன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.