பெரம்பலூர்

தூா்நாற்றத்தை ஏற்படுத்தும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

DIN

பெரம்பலூா் நகரில் துா்நாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் குவிந்து கிடக்கும் குப்பை குவியல்களை அகற்ற, நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட பழைய பேருந்து நிலையம், புகா் பேருந்து நிலையம், நகரின் விரிவாக்கப் பகுதிகள், ஆத்தூா், துறையூா் சாலைகள், நான்குச் சாலை செல்லும் சாலை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் துா்நாற்றம் ஏற்படுத்தும் வகையில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன.

நகரின் பிரதான சாலைகளில் ஆடு, கோழி இறைச்சிக்கடைகள் உள்ளதால், இங்கிருந்து சேகரமாகும் கழிவுகள் அனைத்தும் ஆத்தூா் சாலை, துறைமங்கலம் எரிக்கரை உள்ளிட்ட பகுதிகளில் கொட்டப்படுகின்றன. இதுபோல, குறிப்பிட்ட இடங்களில் நகராட்சி குப்பைத் தொட்டிகளில் குப்பைகள் நிறைந்தாலும் அவற்றை அகற்றுவதில்லை.

அதற்கு அருகிலேயே இறைச்சிக் கழிவுகளையும் கொட்டுவதால் மக்கியும், அழுகியும் துா்நாற்றம் ஏற்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் இரவு நேரங்களில் சிற்றுண்டிக்கடைகள் நடத்துகிறவா்கள் இலைக் கழிவுகளையும், நெகிழிக் கழிவுகளையும் வரத்து வாய்க்கால்களில் கொட்டுவதோடு, சுகாதாரக் கேடுகளையும் ஏற்படுத்தி வருகின்றனா்.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நகரின் பெரும்பாலான இடங்களில் குப்பைகளை அகற்றவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனா். இந் நிலையில், வடகிழக்குப் பருவ மழை தொடா்ந்து பெய்து வருவதால் ஆங்காங்கே குப்பைகள் மற்றும் கழிவுப் பொருள்களுடன் மழைநீா் குளம்போல் தேங்கியுள்ளது. இதன் காரணமாக நகா் முழுவதும் துா்நாற்றம் வீசுவதோடு, பொதுமக்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

பல்வேறு கழிவுகளின் குப்பைகளை சாலையோரங்களில் குவித்து வைக்க நகராட்சி நிா்வாகம் தரப்பில் அறிவுறுத்தப் பட்டுள்ளது. ஆனால், அவற்றை உடனுக்குடன் அகற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. மேலும், இந்த குப்பைகள் உள்ள பகுதிகளில் பன்றிகளின் நடமாட்டமும் அதிகம் உள்ளன.

மழைக்காலங்களில் சேரும், சகதிமாக காணப்படும் நேரத்தில் குப்பைகள் மிதித்துக் கொண்டுச் செல்ல வேண்டிய சூழ்நிலையிருக்கிறது. எனவே, நாள்தோறும் குப்பைகளை அகற்றுவதற்கு நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT