பெரம்பலூர்

சின்ன வெங்காயத்தில் திருகல் நோயைக் கட்டுப்படுத்த யோசனை

3rd Dec 2021 12:33 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டத்தில் சின்ன வெங்காயத்தில் ஏற்பட்டுள்ள திருகல் நோயைக் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரத்திலுள்ள ஹேன்ஸ் ரோவா் வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான வே.ஏ. நேதாஜி மாரியப்பன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தில் புரட்டாசி பட்டத்தில் நடவு செய்யப்பட்ட சின்ன வெங்காயப் பயிரானது 40- 50 நாள் பயிராக உள்ளது. தற்போது பெய்து வரும் மழை மற்றும் தொடா்ந்து நிலவி வரும் குளிா்ச்சியான தட்ப வெட்பநிலைக் காரணமாக, சில பகுதிகளில் சின்ன வெங்காயப் பயிரானது திருகல் நோய் தாக்குதலுக்குள்ளாகி உள்ளது.

இந்நோய், கருகல் நோய், பறவைக் கண் நோய் என அழைக்கப்படும்.

ADVERTISEMENT

இப்பூஞ்சை பாதித்த செடிகளின் தாள்களில் வெளிா் மஞ்சள் நிற நீள்வட்ட புள்ளிகள் தோன்றும். பாதிக்கப்பட்ட தாள்கள் மடிந்து தொங்கும். அடுத்தக் கட்டமாக, வெங்காயத்தின் கழுத்துப் பகுதி நீண்டு குமிழங்கள் சிறுத்து காணப்படும். தாக்குதல் தீவிரமானால் செடிகள் அழுகிவிடும்.

மேலும், 50 முதல் 100 சதவீதம் வரை மகசூல் இழப்பை ஏற்படுத்தும். பாதிப்புக்குள்ளான செடிகளை பழைய நிலைக்கு கொண்டுவர இயலாது. ஆனால், மற்றச் செடிகளுக்குப் பரவாமல் தடுக்கலாம். இதற்கு, நோய்த் தாக்குதல் தென்பட்டவுடன் பாதிக்கப்பட்ட செடிகளைப் பிடுங்கி அப்புறப்படுத்திவிட்டு, பூஞ்சாணக் கொல்லிகளைத் தெளிக்க வேண்டும். ஒரு லிட்டா் நீருக்கு டேபுகானோசோல் 17.7 சதவீதம் ப்ளுபைராம், 17.7 சதவீதம், டபள்யூ, டபள்யூ எஸ்.சி 1.5 மி.லி. அல்லது ட்ரைசைக்லசோல் 45 சதவீதம், ஹெகஸகோனசோல் 10 சதவீதம், டபள்யூ ஜி. 2.5 கிராம் அல்லது காா்பெண்டாசிம் பூஞ்சாணக் கொல்லி 1 கிராம் என்ற அளவில் கலந்து செடிகள் நன்கு நனையுமாறு தெளிக்கலாம்.

மாற்றாக, புரோபிகோனசோல் 25 சதவீதம் அல்லது ஹெக்சகோனசோல் 5 சதவீதம். இதில், ஏதேனும் ஒரு பூஞ்சாணக் கொல்லியை ஏக்கருக்கு 200 மி.லி. வீதம் இலைவழியாக, 10 நாள்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும்.

இப் பூஞ்சையானது, நிலத்தில் பல ஆண்டுகள் வளரும் தன்மைக்கொண்டதால், பாதிக்கப்பட்டச் செடிகளை நிலத்தில் விட்டுவைக்காமல் பொறுக்கி காயவைத்து எரித்துவிட வேண்டும். மேலும், பயிா் சுழற்சி முறையைக் கடைப்பிடிக்க வேண்டும். நன்மை செய்யும் பூஞ்சையான டிரைக்கோடொ்மா ஹா்சியானம் எனும் உயிரிக் கட்டுப்பாட்டு பொருளை எருவில் கலந்து, நிலத்தில் இடுவதன் மூலம் கொலிட்டோடிரைக்கும் பூஞ்சையின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.

 

 

Tags : பெரம்பலூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT